முதலில் அணிகலன்கள் என்பனவற்றைப் பார்க்கலாம். சிலருக்கு எந்த அணிகலனும் அணியாமல் இருந்தாலே
அழகாக இருப்பார்கள். அதனால் அணிகலன்கள் அழகுக்கு அத்தனை முக்கியமானவை அல்ல என்றாலும்,
ஆடை, ஒப்பனை, ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு நகைகளை அணிந்து கொண்டால்தான் அழகாக
இருக்கும்.
பட்டுப்புடவை கட்டி, புதுமையான தலை அலங்காரம் செய்து நகைகள் அணியாமல் இருந்தால், அத்தனை
அழகும் பாழாகி விடும். அதனால் கற்களால், முத்துக்களால், தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றால்
அழகு கிடைக்கலாம். ஆனால் அதற்கேற்ற விழாக்கள், உடைகள் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு நகை அணிய
வேண்டும் என்பதுதான் முக்கியம்.
நிறைய நகைகள் இருக்கின்றன என்பதற்காக இருக்கும் அத்தனை நகைகளையும் அணிந்து கொள்வது
அழகுக்கு இலக்கணமல்ல. ஏனென்றால் இப்போது திருமணங்களுக்குகூட குறைவான நகைகள் அணிவதுதான்
ஃபேஷன்.
அதேபோன்றுகுளித்து முடித்து அலங்காரம் செய்யும் நேரத்தில் கண்ணாடியின் முன் உட்கார்ந்து கொண்டு
என்ன உடை அணிவது, என்ன நகை அணிவது என்று யோசிப்பவர்கள்தான் அதிகம். இதுதான் பல்வேறு
அழகின்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகிறது.
ஆம், முதல் நாள் இரவே, செல்ல வேண்டிய இடம், நேரம், அங்கே இருக்க ஆகும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து
அதற்கேற்ப ஆடைகளையும், அணிய வேண்டிய நகைகளையும் எடுத்து வைத்துவிட வேண்டும், குறைந்தபட்சம்
மனதிலாவது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உடை, நகை மட்டுமின்றி போடவேண்டிய ஹேண்ட் பாக்,
செருப்பு, பூ, பொட்டு போன்றவற்றையும் முன்னரே தீர்மானித்து விட்டால், அலங்காரத்திற்கு கூடுதல் நேரம்
எடுத்துக் கொள்ள முடியும்.