வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தன். விவசாயியான இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அனைவரையும் போலவே இவரது குடும்பத்தினரும் பசுக்களையும் கன்றுகளையும் தங்கள் பிள்ளைகள் போலவே பாவித்து வளர்த்து வருகின்றனர்.
அவர்கள் வளர்த்து ஒரு பசு ஒன்று அன்மையில் மூன்று குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு கன்றுக்குட்டி தான் தற்போது மனிதர்களைப் போல் பல சேட்டைகளை செய்து வருகிறது. அப்படி என்ன சேட்டை செய்கிறது என்றால், வீட்டிற்குள் பாய் விரித்து தலையணை வைத்து சொகுசாக தூங்கும் அளவுக்கு சேட்டை செய்து கொண்டிருக்கிறது.
அதுவும் ஃபேன் இல்லாவிட்டால் அந்த கன்றுக்குட்டிக்கு தூக்கமே வராதாம். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உணவு சாப்பிடுவது அந்த கன்றுக்குட்டிக்கு ரொம்ப பிடிக்குமாம். அதுமட்டுமல்ல ஆனந்தனின் குடும்பத்தினர் இட்லி சாப்பிட்டால் அந்த கன்றுக்குட்டியும் இட்லி சாப்பிடுமாம். இவ்வளவு சேட்டை செய்யும் அந்த கன்றுக்குட்டியை தங்கள் பிள்ளையாக பார்க்கும் ஆனந்தனின் குடும்பத்தினர், கன்றுக்குட்டிக்கு ஆதார் கார்டு வேற கேட்கிறார்கள்.