Tamil Tips
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய 10 பண்புகள்

ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் குழந்தைகளைப் பண்போடு வளர்ப்பது முக்கிய கடமையாகும். இன்றைய வாழ்க்கை மாற்றத்தில் பெற்றோர்கள் அதனை மறந்து விடுகிறார்கள் அல்லது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

குழந்தைகள் சமுதாய பொறுப்புடன் வளர வேண்டும். பிறரிடம் எப்படிப் பழகுவது, தினமும் தங்களுக்கு ஏற்படும் சவால்களை எப்படி பொறுமையாகக் கையாளுவது, அனைவரிடத்திலும் எப்படி அன்போடு பழகுவது என்று கற்க வேண்டியது இன்னும் பல உள்ளன. இந்த நெறிகளோடு வளரும் குழந்தைகள் தன் வாழ்கையில் நிச்சயம் நல்ல நிலைக்கு உயர்ந்து செல்வதோடு பிறர் மதிக்கும் வாழ்க்கையையும் வாழ்வர். எனினும், ஒரு குழந்தை நல்ல பண்புகளோடு வாழ்வதும் அல்லது நெறி தவறி வாழ்வதும் அவனது பெற்றோர்கள் கையில்தான் இருக்கிறது.

பெற்றோர்களின் கடமை
பெற்றோர்கள் தன் குழந்தைக்கு நல்ல உணவு, உடை, தங்கும் வசதி மற்றும் கல்வி என்று இவற்றை மட்டும் தந்தால் பற்றாது. அவர்கள் மேலும் முயற்சி எடுத்து தன் குழந்தைகளுக்காகப் போதிய நேரம் செலவு செய்து அவர்களது குணங்களைப் புரிந்து கொண்டு மேலும் அவர்கள் நல்ல மனிதர்களாக வளரவும் வாழவும் என்னென்ன பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அதனோடு போதிய முயற்சியும் எடுக்க வேண்டும். அவ்வாறு சிறு வயதிலேயே நல்ல பண்புகளோடும், சமுதாய அக்கறையோடும், பிற மனிதர்களிடத்திலும், உயிர்களிடத்திலும் அன்பைப் பகிர்ந்து வாழும் குழந்தைகள் நல்ல சாதனையாளர்களாக நாளை மாறலாம்.

கால சூழல்
இன்றைய விரைவான வாழ்க்கைச் சூழலில் பெற்றோர்களால் தங்கள் குழந்தையுடன் தரமான நேரம் ஒதுக்கி அவர்களுக்குத் தேவையான நல்ல விசயங்களைக் கற்றுக் கொடுக்கவும், அவர்களுடன் விளையாடவும், மனம் விட்டுப் பேசவும் முடியாமல் போகிறது.
எனினும், அவர்கள் தங்கள் குழந்தையின் நலன் கருதி மேலும் அவன்/அவள் நல்ல நிலைக்கு முன்னேறி வர வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளோடு பின் வரும் இந்த பண்புகளை கற்றுக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 10 பண்புகள் பற்றி விரிவாக அறியலாமா? (10 Basic Etiquette for Kids in Tamil)

1. அன்பாகப் பேசவும் (Talk polite):

உங்கள் குழந்தைக்கு நீங்கள் முதலில் கற்றுக் கொடுக்க வேண்டிய விசயம், அன்பாகப் பேசுவது. அதற்கு நீங்கள் அவனிடத்தில் அன்பாகப் பேச வேண்டும். பெற்றோர்கள் எப்படியோ அப்படியே குழந்தைகளும் இருப்பார்கள் என்பார்கள்.பெற்றோர்களின் வாழ்வு நெறிகளை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் வாழக் கற்றுக் கொள்கிறார்கள். அதனால் நீங்கள் உங்கள் குழந்தையிடம் அன்பாகப் பேசுவதின் முக்கியத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

Thirukkural

2. நல்ல வார்த்தைகளைப் பயன் படுத்தவும் (Use good words):

எப்போதும் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல வார்த்தைகளைப் பேச கற்றுக் கொடுங்கள். பள்ளியில் அல்லது விளையாடச் செல்லும் இடங்களில் உங்கள் குழந்தை பிற குழந்தைகளிடம் இருந்தோ அல்லது சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களிடம் இருந்தோ தவறான வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள நேரிடும். எனினும் நீங்கள் குழந்தையிடம் அவ்வாறு பேசாமல் நல்ல வார்த்தைகள் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி,அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினால் குழந்தை நிச்சயம் புரிந்து கொள்ளக் கூடும்.

3. பிறரை மதிக்கக் கற்றுக் கொடுக்கவும் (Teach them to respect people):

இன்றைய விரைவான வாழ்க்கை முறையில் அனைவரும் தங்கள் வேலையை விரைவாக முடித்து விட்டு வீடு திரும்பவும், தங்கள் தேவைகளை மட்டும் பார்த்துக் கொள்ளவும் முயல்கிறார்கள். வீட்டில் இருக்கும் பிறரைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. எனினும், அப்படி இருக்காமல் நாம் பெரியோர்களையும், உறவினர்களையும்,நண்பர்களையும் மதித்து, அவர்களிடம் அனுசரணையாக நடக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வளர்க்க வேண்டும்.
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரையும் மரியாதையோடு நடத்த வேண்டும்.கொடுத்தால் திருப்பி கிடைப்பதில் மரியாதையும் ஒன்று என்பதை அவர்கள் மனதில் ஏற்ற வேண்டும்.

4. பொறுமையாக இருக்க வேண்டும் (Be patient):

எந்த ஒரு காரியம் செய்யும் போதும் அல்லது எந்தச் சூழலிலும் நிதானத்தோடும் பொறுமையோடும் இருந்து செயல்படுவது முக்கியம்.பதறிய காரியம் சிதறும் என்பார்கள்.மிகப் பெரிய சூழலிலும் பொறுமையை இழக்காமல் செயல் பட்டவர்களே இன்றளவும் சரித்திரத்தில் நிலைத்து உள்ளார்கள் என்பது மெய்.அப்படிப்பட்ட சாதனையாளர்களின் கதைகளை அவர்களுக்குக் கூற வேண்டும்.பொறுமையின் மகத்துவத்தை உங்கள் குழந்தைக்குச் சிறு வயதிலிருந்தே நீங்கள் சொல்லிக் கொடுக்கும் போது அவர்கள் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதோடு நல்ல பண்பான குழந்தையாகவும் வளரும்.

5. நல்ல விருந்தினராக இருக்க வேண்டும் (Be a good guest):

ஒருவர் வீட்டிற்கு விருந்தினராக நாம் செல்லும் போது அங்கு எப்படி பண்போடும் நல்ல மரியாதையோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தை வீட்டில் சேட்டை செய்வது வழக்கமாக இருக்கலாம்.ஆனால் அதே போல விருந்தினர் வீட்டிலும் நடந்து கொள்ளாமலும், அவ்வீட்டினருக்குச் சிரமங்களை ஏற்படுத்தாத வகையில் நல்ல ஒழுக்கத்தோடு நடந்து கொள்வது முக்கியம். இதை அவர்களுக்கு நீங்கள் கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டும்.ஏனென்றால் நம் பிள்ளைகளின் வாழ்வின் எல்லை வீட்டோடு முடிவதில்லை.ஆம்!இந்த பரந்து விரிந்த உலகத்தில் அவர்கள் எங்கும் முத்திரை பதிக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்

6. பயப்படாமல் இருக்க வேண்டும் (Do not afraid):

இன்று பல குழந்தைகள் பயத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அதிகம் தனிமையில் வாழ்வதும் வளர்வது தான். பரந்துவிரிந்த உறவினர்க் கூட்டங்களை விட்டுவிட்டு தாய் மற்றும் தந்தையோடு மட்டும் ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் யாரிடமும் பேசாமல், பழகாமல் வாழ்கின்றனர். மேலும் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்று விடுவதால் அந்தக் குழந்தை அதிக தனிமையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு இயல்பாகவே பல விசயங்களில் எப்படி நடந்து கொள்வது எப்படிச் சூழலை சமாளிப்பது என்று தெரிய வருவது இல்லை. அதனால் காரணமே இன்றி ஐயம் கொள்ளத் தொடங்கி விடுகிறார்கள். இதனைப் போக்க முயல்வது மிகவும் முக்கியம்.பயம் முன்னேற்றத்தின் எதிரி!தைரியமே வெற்றியின் அச்சாணி என்பதைப் போதிக்க வேண்டும்.உங்கள் வாழ்வு அனுபவங்களைக் கூடச் சொல்லி தன்னம்பிக்கை ஊட்டலாம்.

7. சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் (Be active):

குழந்தைகள் சோம்பலின்றி உற்சாகத்தோடு காணப்பட வேண்டும்.ஆனால் இன்று நேர்மாறாக உள்ளது. இதற்குக் காரணம் அவர்கள் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை தான்.அதனால் அவர்கள் சுறுசுறுப்பாகப் பிற குழந்தைகளோடு கூடி விளையாடச் சூழல் கிடைக்க நாம் வழிவகை செய்ய வேண்டும். பெற்றோர்கள் தாமும் முன் வந்து குழந்தையோடு விளையாடிச் சிரித்து மகிழ வேண்டும்.இந்த விசயம் அவர்கள் சுறுசுறுப்பாக வளருவதை உறுதி செய்யும். மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிலே அடைக்காமல் விளையாட உற்சாகமூட்ட வேண்டும். நிறைய வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

8. போட்டி மற்றும் பொறாமைக் குணங்களைத் தவிர்ப்பது (Avoid competition and jealous):

இன்றைய உலகத்தில் போட்டியும் பொறாமையும் அதிகம் நிறைந்திருக்கின்றன.இந்தச் சூழலில் வாழும் மனிதர்கள் நிச்சயம் நிம்மதி இல்லாமலும் மகிழ்ச்சி இல்லாமலும் வாழ்ந்து வருகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஒன்றை நிச்சயம் புரிய வைக்க வேண்டும்.அது அடுத்தவர் வெற்றியை மதிப்பதும்,கொண்டாடுவதும் தான்.இதுவே உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஏற்றது.சில்லறை மனப்பான்மைகளை அவர்கள் மனதிலிருந்து முளையிலே கிள்ளி எறிந்துவிடுவது நல்லது.போட்டி மற்றும் பொறாமை அற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதின் அர்த்தத்தை அவர்கள் உணர நாம் வழி வகை செய்ய வேண்டும்.

9. நன்றி கூறுதல் (Thanking):

குழந்தைகளுக்கு நன்றி கூறக் கற்றுக் கொடுங்கள். விரும்பிய பொருளோ அல்லது விசயமோ அவர்களுக்கு தங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பிற மனிதர்கள் மூலம் கிடைக்க நேர்ந்தால், உடனே அவர்களுக்குப் பதிலாக நன்றி உரைத்தல் வேண்டும் என்ற முக்கியத்துவத்தை கற்றுக் கொடுங்கள். இது நன்றி உணர்வை அதிகரித்து,அவர்களை மேலும் நல்ல பண்பாளராக வளரச் செய்யும்.

10. வீட்டின் விதிமுறைகள் (House rule):

இதை நீங்கள் நிச்சயம் உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். வீட்டில் அனைத்து உறவுகளோடும் சேர்ந்து வாழும் போது நாம் எப்படி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்போடும் ஆதரவோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.அது போக முக்கியமாக ஒரு பொருளை எடுத்தால் அதை மீண்டும் உரிய இடத்தில் வைத்தல்,பொருட்களைக் களையாமல் ஒழுங்காக அடுக்குதல், சரியான நேரத்திற்கு உண்ண வருதல் என்பன எல்லாம் இதில் அடங்கும். வீட்டிலிருந்தே நல்ல பண்புகள் தொடங்குகின்றன. இந்த ஒழுங்கு முறை மகிழ்ச்சியான வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த 10 பண்புகள் உங்கள் குழந்தையை ஒரு நல்ல மனிதனாக ஆக்குவதோடு, வாழ்க்கையில் வெற்றி பெற்றவராகவும் மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

1+ வயது குழந்தைகளுக்கான சிறந்த புரத உணவுகள்

tamiltips

குழந்தைகளுக்கான 6 வகையான கஞ்சி ரெசிபி

tamiltips

குழந்தைகளுக்கான ஹோம்மேட் வேப்பர் ரப் செய்வது எப்படி?

tamiltips

பாரம்பர்ய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

tamiltips

ஆண் குழந்தை பிறக்க உண்ண வேண்டிய உணவுகள்

tamiltips

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

tamiltips