HFMD (Hand Mouth Foot disease) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ‘கை பாத வாய்’ நோய் இன்று பல பெற்றோர்களை அச்சுறுத்தி வருகிறது. இதை ஒரு வகை வினோத காய்ச்சல் என்பார்கள். சமீப காலமாக இந்த நோய் அதிக அளவில் தமிழகத்தில் பரவி வருகிறது. ஆக குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. குழந்தைகளுக்கு இந்த நோய் வராமல் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.
அதற்கு என்ன செய்யலாம்? இந்த வியாதி எதனால் வருகிறது? இந்த வியாதியின் அறிகுறிகள் என்ன? இந்த வியாதிக்கான மருந்துகள் என்ன? இந்த வியாதி வராமல் தடுப்பது எப்படி? இந்த நோயும் சின்னம்மையும் ஒன்றா?என்று அனைத்து விவரங்களையும் தெளிவாகக் காணலாம். குறிப்பாக இந்த வினோத காய்ச்சலுக்கான அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் தென்பட்டால் உடனே மருத்துவமனை செல்வது மிகவும் நல்லது. ஏனெனில் இது அவ்வளவு தீவிரமானது.
எந்தக் கிருமி ‘கை பாத வாய்’ நோயை ஏற்படுத்துகிறது?
‘கை வாய் பாதம்’ நோய்(Hand Mouth Foot disease-HFMD in Tamil) என்பது ஒருவிதமான தொற்று நோயாகும். இந்த வகை தொற்று நோய் பரவுவதற்கு வைரஸ் கிருமிகள் தான் காரணம். காக்ஸ்சாக்கி மற்றும் என்டெரோ என்னும் இரண்டு வகை வைரஸ்களால் இந்தக் ‘கை வாய் பாத’ நோய் பரவுகிறது. இந்த காக்ஸ்சாக்கி என்னும் வைரஸில் மட்டுமே மொத்தம் 23 வகைகள் உள்ளன. அதில் சமீபகாலமாக டைப் 16 அதிக அளவு பரவி வருகிறது. இந்த வைரஸ் மழைக்காலங்களில் தான் அதிக அளவு பரவி குழந்தைகளைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த குழந்தைகள் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை பலரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மழைக்காலம் என்றால் சற்று கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.
இந்த HFMD வியாதியின் அறிகுறிகள் என்ன?
1.முழங்கை ,முழங்கால் மற்றும் பாத அடிப்பகுதிகளில் சிவப்பு கொப்பளங்கள்.
(கொப்பளங்கள் ஒரு குழுவாகக் காணப்படும்.இவை அரிப்பு ஏற்படுத்தாது.)
2.கை ,கால்களில் தடிப்புகள்
4.வாயில் அதிகப்படியான உமிழ் நீர் சுரக்கும்.
5.இருமல்
6.தும்மல்
7.காய்ச்சல்
8.தொண்டை வலி
‘கை வாய் பாத’ வியாதி யாரைத் தாக்கும்?
ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த வியாதி எளிதாகத் தாக்கிவிடுகின்றது. பெரியவர்களையும் இந்த நோய் தாக்குகிறது. இருப்பினும் பெரியவர்களுக்கு எதிர்ப்புச்சக்தி சற்று அதிகமாக இருப்பதால் அவர்களால் எளிதில் மீள முடிகிறது.
பெரியவர்களுக்குத் தொண்டை வலி ஏற்பட்டு, தானே எதிர்ப்புச் சக்தி தோன்றி விரைவில் சரியாகி இருக்கும். அதனால் பலருக்கு இந்தக் குறிப்பிட்ட வைரஸ் தாக்கியதே தெரியாது. ஆனால் குழந்தைகள் சற்று சிரமமத்திற்கு ஆளாகி தான் நோயில் இருந்து வெளியே வருகின்றனர்.
அதிலும் இந்த வகை வைரஸ்களில் சில அபாயகரமான வகைகள் உள்ளன. அவை முடக்குவாதம், சிறுவயது நீரிழிவு, இதயம், மூளை, நுரையீரல் பாதிப்புகள் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இந்த நோய் வெளிநாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றது. இதற்கு காரணம் அங்கே நிலவும் அதிக குளிர் தான். அங்கே வருடம் சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனராம்.
இந்நோயில் இருந்து மீள்வது எப்படி?
இந்த நோய்க்கு என்று தனியாக மருந்து எதுவும் கிடையாது. இந்த நோய்க்கு என்று குறிப்பிட்ட மருந்தோ சிகிச்சையோ இல்லாததால் இதனை ‘மருந்தில்லா நோய்’ என்று கூறுகின்றனர். இந்த வியாதி ஏற்பட்ட முதல் மூன்று நாட்களில் வாயில்
புண்கள் காணப்படும். ஐந்து நாட்களுக்குள் படிப்படியாக இந்த புண்கள் மறைந்து வியாதி குறையத் தொடங்கும். உடல் தானே இந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படும். தேவையான எதிர்ப்புச் சக்தி உருவான பிறகு உடல் தன்னை நோயில் இருந்து விடுவித்துக் கொள்ளும். இந்த வியாதியானது தானே சரியாகி விடும் என்பதால் இதைக் குறித்து மிகவும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேலும் நோயிலிருந்து மீள சில குறிப்புகள்.
- உடல் வலி அதிகபட்சமாக இருக்கும் சமயத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
- இந்த வியாதிக்கு என்று எந்த வகை தடுப்பூசியும் கிடையாது.
- குழந்தைகளால் வலி தாங்க இயலாது. அதனால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இருந்தால் உடனே குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் வாய்ப்புண்ணுக்கும், கை கால் வலிக்கும் தனித்தனி மருந்துகள் தருவார்.
- இவற்றை சரியாகப் பின்பற்றுவதன் மூலம் ஐந்து நாட்களில் குணமாகும் வாய்ப்பும் உள்ளது.
- கொப்பளங்கள் அமுங்கி மறைந்தவுடன் கருப்புப் புள்ளிகள், பாதிக்கப்பட்ட இடங்களில் தென்படும்.
- கொஞ்ச நாட்களில் அந்த புள்ளிகளும் மறைந்து சருமம் பழையபடி நன்றாக ஆகிவிடும்.
- நோய் தாக்கத்திற்கு ஆளான குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் அதிக அளவு கடைப்பிடிப்பதன் மூலம் நோயின் தாக்கத்தை பெரிய அளவு குறைத்துக் கொள்ள இயலும்.
- விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். விட்டமின் சி உடலின் எதிர்ப்பு மையங்களைப் பலப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக நெல்லிக்காய்,ஆரஞ்சு போன்றவற்றில் விட்டமின் சி நிறைந்துள்ளது.
- நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். கூடதலாக இளநீர், மாதுளை சாறு போன்றவற்றை பருகலாம்.
- பூண்டை உணவில் அதிகம் சேர்க்கலாம்.இது கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
- ஏசியினைப் பயன்படுத்தாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- இளஞ்சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக் கொள்வதால் தேவையான விட்டமின் டி உடலில் உற்பத்தி ஆகிவிடும். நோயிலிருந்து விரைவாக மீளலாம்.
- தயிர், மோர், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
- சில குழந்தைகளுக்கு இளைப்பு(wheezing) வரும்.அந்த மாதிரி குழந்தைகளுக்கு மருத்துவர்கள் நெபுலைசர் பயன்படுத்தப் பரிந்துரைப்பார்கள்.
- குழந்தைகள் தொண்டை வலியால் சாப்பிட சிரமப்படுவார்கள். அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவு உணவு கொடுத்து தாய்மார்கள் தொந்தரவு செய்யக் கூடாது.
- விழுங்குவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு பால், கஞ்சி உணவுகளைத் தரலாம். இடைவெளிவிட்டு உணவுகளை பகுதியாகப் பிரித்துக் கொடுக்கலாம்.
- நோய்த் தாக்கத்திற்கு ஆளாகி குழந்தைகளுக்கு போதிய அளவு தூக்கம் அவசியம்.
இந்த HFMD வினோதக் காய்ச்சல் எப்படிப் பரவுகின்றது?
நோய் தாக்கத்திற்கு ஆளான நபரின் எச்சில், மலம் போன்றவற்றின் மூலம் இந்த வைரஸ் கிருமி பரவுகின்றது. பெரும்பாலும் பள்ளிக்குச் செல்லும் போதோ, பயணங்களின் போதோ இந்தத் தொற்று குழந்தைகளிடம் எளிதாக பரவி விடுகிறது. வியாதி இருப்பவர்கள் தும்பும் பொழுதும் இரும்பும் பொழுதும் கைக்குட்டையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அருகில் இருப்பவர்களுக்குக் கிருமி எளிதாகப் பரவிவிடும். நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள்
பயன்படுத்திய பொருட்கள் மூலமாகவும் பரவும்.
‘கை பாத வாய்’ வியாதி வராமல் தடுப்பது எப்படி?
- இந்த வியாதி வராமல் தடுக்க இருக்கும் மிக முக்கிய வழி சுத்தமே ஆகும்.
- வசிக்கும் வீட்டை இயன்றவரைச் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்வது அவசியம்.
- குழந்தைகள் பள்ளி விட்டுத் திரும்பினாலும் அல்லது விளையாட்டுகளை முடித்து விட்டுத் திரும்பினாலும் கை கால்களைத் தவறாமல் கழுவ வேண்டும். இதை ஒரு பழக்கமாக மாற்றி விட வேண்டும்.
- அதே மாதிரி எந்த உணவை சாப்பிடும் முன்பும் கை கழுவுவது அவசியம்.
HFMD எப்படி பரவுகின்றது?
எச்சில், மலம் போன்றவற்றின் மூலம் இந்த வைரஸ் கிருமி பரவுகின்றது. பெரும்பாலும் பள்ளிக்குச் செல்லும் போதோ பயணங்களின்போதோ இந்த தொற்று குழந்தைகளை எளிதாக தாக்கிவிடுகிறது. வியாதி இருப்பவர்கள் தும்மும் பொழுதும் இருமும் பொழுதும் கைக்குட்டையைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிடில் அருகில் இருப்பவர்களுக்கு எளிதாகப் பரவிவிடும்.
இந்த நோயைப் போலியோவின் நண்பன் என்று அழைப்பார்கள். நோய் சரியான ஐந்து நாட்கள் கழித்து கை கால்களை மடக்குவதிலும் திறப்பதிலும் மிகவும் சிரமம் தெரியும். அதனாலே இந்த வியாதியை அப்படிச் சொல்வார்கள்.
‘கை பாத வாய்’ வியாதியும் அம்மை வியாதியும் ஒன்றா?
இந்த வியாதியின் அறிகுறியாக உடலின் சில பகுதிகளில் கொப்பளங்கள் தோன்றும். எனவே இதனைச் சிலர் தவறாக அம்மை வியாதி என்று நினைத்துக் கொள்கின்றனர். அம்மைக்கும் இந்த வியாதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
கொப்பளங்களை மட்டுமே காரணமாக வைத்து அம்மை என்று எடுத்துக் கொள்வது தவறு. சில பெற்றோர்கள் விவரம் தெரியாமல் அம்மை நோய்க்கான சிகிச்சைகளைச் செய்யத் தொடங்கி விடுவார்கள். இது முற்றிலும் தவறான நடவடிக்கை. கொப்பளம் தோன்றிய உடனே மருத்துவரிடம் ஆலோசித்து எந்த வியாதி தாக்கியள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
‘கை பாத வாய்’ நோய் மீண்டும் மீண்டும் வர வாய்ப்புள்ளதா?
இல்லை. ஒருமுறை இந்த வைரஸ் உடலை தாக்கிய பிறகு இரத்தில் இந்த நோய்க்கு எதிரான எதிர்ப்புச் சக்தி உருவாகி விடும். அதன் பிறகு மீண்டும் இந்த நோய் உடலை தாக்க வாய்ப்பு கிடையாது.
‘கை பாத வாய்’ வியாதியைப் பற்றி ஒரு முழுமையான தகவல்களைப் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த வகை வியாதியில் இருந்து தப்பிக்க சுத்தத்தின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இருப்பீர்கள். ஆக இனி போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உங்களையும், உங்கள் குழந்தைகளையும் இந்த வியாதி தாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?