குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள எடுக்கப்படும் முதல் பரிசோதனை, ஸ்கேன். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம், குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை குறித்து துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அதைக் குறித்த பயமும் தெளிவின்மையும் பலரிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஸ்கேன் செய்வது நல்லதா? அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா? ஏன் ஸ்கேன் நல்லது என்பதை இந்தப் பதிவில் முழுமையாகப் பார்க்கலாம்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan)
இந்த ஸ்கேன் மூலம் அல்ட்ராசவுண்ட் ஒலி, கருவில் உள்ள குழந்தை மீது பட்டு எதிரொலிக்கிறது. அந்த எதிரொலியைக் காணொளியாக மாற்றி, குழந்தையின் ஒரு இமேஜ் கிடைக்கிறது. குழந்தை எவ்வளவு வளர்ந்திருக்கிறது, எந்த இடத்தில் இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எதற்காக செய்ய வேண்டும்? (Why should an ultrasound scan be taken?)
குழந்தையின் இதயத் துடிப்பை தெரிந்துகொள்ள உதவும்.
கருவில் இருப்பது ஒரு குழந்தையா, இரட்டைக் குழந்தைகளா அல்லது எத்தனை குழந்தைகள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
Ectopic Pregnancy எனப்படும், கருவிற்கு வெளியில் குழந்தை வளர்வது போன்ற பிரச்சனைகளைக் கண்டுபிடிக்கலாம்.
இதையும் படிக்க: யாருக்கு உண்மையிலே சிசேரியன் தேவை? என்னென்ன காரணங்கள்?
உடலுக்குள் ஏதேனும் ரத்த கசிவு ஏற்படுகிறதா எனத் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தை டவுன் சிண்ட்ரோம் பிரச்னையால் பாதித்து உள்ளதா என்பதைக் கண்டறியலாம்.
குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இந்தியா உட்பட பல நாடுகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது.
குழந்தை எந்த இடத்தில், எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
குழந்தையின் அனைத்து உறுப்புகளும் இயல்பாக, ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.
வயிற்றில் உள்ள அமினியாடிக் திரவம் சரியான அளவில் உள்ளதா எனக் கண்டுபிடிக்கலாம்.
குழந்தை எப்போது பிறக்க வாய்ப்பிருக்கிறது என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியும்.
குழந்தையின் அனைத்து உறுப்புகளும் சரியாக வளர்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். முக்கியமாக மூளை மற்றும் தண்டுவடம் குறைபாடுகளைக் கண்டறிய உதவும்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எப்போது செய்ய வேண்டும்? (When should ultrasound scans be carried out?)
ஆரோக்கியமான கர்ப்பிணிகள் என்றால், 10-14 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்யப்படும். அதற்கு முன்பாக வலி அல்லது உதிரப்போக்கு இருந்தால், மருத்துவரால் ஆறு அல்லது ஏழு வாரங்களிலேயே ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்படும்.
கர்ப்பிணிக்கு வயிறு வலி வந்தாலோ, ரத்த கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேன் செய்யலாம்.
ஏற்கெனவே கருசிதைவு ஏற்பட்ட கர்ப்பிணிகள், மருத்துவர் அனுமதியோடு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்.
சீரற்ற மாதவிலக்கு சுழற்சி இருந்து கர்ப்பமான பெண்களும், அவசியம் ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.
முதல் ஸ்கேனிலேயே இரட்டைக் குழந்தைகளா, குழந்தை பிறக்கும் தினம் ஆகியவற்றைக் கண்டுபிடித்துவிடலாம்.
அதற்கு அடுத்து, 18-21 வாரங்களில், குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்று பார்க்க இரண்டாவது ஸ்கேன் செய்யப்படும்.
20-22 வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN, அதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் குறிப்பாக கவனிப்பார்கள்.
28-40 வாரங்களில் சிலருக்கு ஸ்கேன் செய்யச் சொல்வார்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, குழந்தை சராசரி அளவைவிட பெரிதாகவோ சிறிதாகவோ இருந்தாலோ இதைச் செய்ய வேண்டும்.
சிலருக்கு வயிறு வழியாக இல்லாமல், பிறப்புறுப்பு வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாக இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பயம் வேண்டாம்.
சில பெண்களுக்கு, தொடர்ந்து சிறிய அளவிலான ரத்தப்போக்கு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
32 வாரங்கள் கழித்து இன்னொரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை தேவைப்படலாம். இதில் குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதா, போதுமான எடை கூடியிருக்கிறதா என அறியலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு இந்த ஸ்கேன்வரை எடுத்தாலே போதும். ஒருவேளை ரத்தக்கொதிப்பு, நீரிழிவு இருந்தால் அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைப்பர்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆரோக்கியமானதா? (Are ultrasound scans healthy?)
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் குழந்தைகளையோ தாய்மார்களையோ பாதிப்பதாக இதுவரை ஆதாரங்கள் இல்லை. ஸ்கேனின் போது சிறிய அளவிலான சூடு ஏற்படும். ஆனால், இது எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
ஒரு டிகிரிக்கும் குறைவான வெப்பமே இது உருவாகும். அதுவும் நம் திசுக்களால் எடுத்துக்கொள்ளப்படும். ஒருவேளை வெப்பம் நான்கு டிகிரிக்கு அதிகமானால், பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சரியான இடங்களில் ஸ்கேன் செய்து கொண்டால், எந்தவித பயமும் இல்லை.
அதிகமான இடங்களில் 2D ஸ்கேன்களே செய்யப்படுகின்றன. இதில், குறைந்த அளவிலான அல்ட்ராசவுண்ட் ஒலி, அதிகமான இடத்தில் பரவலாக சென்று எதிரொலிக்கிறது. அதுமட்டுமில்லாமல், குழந்தையைச் சுற்றி உள்ள நீரில் பெருவாரியான வெப்பம் தணிக்கப்படுகிறது. எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
3D ஸ்கேன் என்பது சில தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. இதிலும், 2D ஸ்கேன் சற்று அதிக நேரம் எடுக்கப்பட்டு, முப்பரிமாண படமாகத் தெரிகிறது. எனவே இதுவும் பெரிய பாதிப்பில்லை. ஆனால், 4D ஸ்கேன் என்பதை முதல் ஐந்து மாதங்கள் செய்ய வேண்டாம் என்பது மருத்துவர்களின் கருத்து. காரணம், குழந்தை சிறியதாகவும், அதிகமான அசைவில்லாமலும் இருப்பதால், வெப்பம் உடனடியாகத் தாக்கக்கூடும்.
இதையும் படிக்க: குழந்தைக்கு திட்டமிடும் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டுபவர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு சத்து!
மருத்துவர் பரிந்துரைக்காமல், தாங்களாகவே ஸ்கேன் செய்ய கூடாது. தேவையற்ற கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகள் மீதும் குழந்தையின் மீதும் படுவதைத் தவிர்க்க வேண்டும்.
டாப்லர் ஸ்கேன்களும் முடிந்தவரைத் தவிர்க்கலாம். குழந்தைக்கு ஆக்சிஜன் (மூச்சுக் காற்று) சரியாகச் செல்கிறதா என்றும், தொப்புள்கொடி வேலை செய்கிறதா என்றும் பார்க்கவே இவ்வகை ஸ்கேன் செய்யப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தாராளமாகச் செய்யலாம்.
ஸ்கேனில் கவனிக்க வேண்டியவை
முதல் 10-12 வாரங்களில் முடிந்தளவு டாப்ளர் ஸ்கேனை தவிர்க்கலாம். பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே செய்யவும். அதுவும் மருத்துவரின் பரிந்துரைப்பு மிக மிக அவசியம்
முடிந்தவரையில் 3D மற்றும் 4D ஸ்கேன் வகைகளைத் தவிர்க்கலாம்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை.
வீட்டில் எந்த வித கருவியையும் தெரியாமல் பயன்படுத்தி ஸ்கேன் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
இதையும் படிக்க: குறை ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம்… ஏன்? எப்படி? அறிகுறிகள்? தீர்வுகள்?
அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா? Is it safe to do ultrasound frequently?
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் அனைத்துக் குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம்.
ஏனெனில், குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலை (Hydrocephalus) முதலில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. இந்தக் கோளாறு கர்ப்பத்தின் பிற்பகுதிக் காலத்தில் தெரிய வரலாம் என்பதால் இப்படிச் சந்தேகம் இருப்பவர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவது நல்லது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனலாம்.
கர்ப்பப்பையில் குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்தும் சில கோளாறுகளை வழக்கமான ஸ்கேனில் பார்க்க முடியாமல் போகும். அப்போது சில நாட்கள் கழித்து வரச்சொல்லி, மீண்டும் ஸ்கேன் எடுப்பார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் குழந்தை சற்றே நகர்ந்து இருக்கும். அதனால் சில பாகங்கள் சரியாகப் பார்க்க முடியும்.
ஒல்லியான உடல் அமைப்பு உள்ளவர்களுக்கு, குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமனாக, குண்டாக உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடிவது கடினம். அப்போது கூடுதலாக சில முறை ஸ்கேன் எடுக்கப்படுவது இயல்பான விஷயம்தான்.
இதையும் படிக்க:எந்த கருத்தடை பாதுகாப்பானது? ஆண், பெண்ணுக்காக கருத்தடை சாதனங்கள் என்னென்ன?