அதனால் எப்படிப்பட்ட காதலரைத் தேட வேண்டும் என்பதை சொல்வதுதான் இந்தக் கட்டுரை.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் காதலுக்கு இலக்கணமாக கருதப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன். அவரை திரையில் பார்த்து காதலிக்காத தமிழ் பெண்கள் கொஞ்சமாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால் திரையில் அவர் உருகியுருகி காதலிப்பார். கமல்ஹாசனை ஒரே ஒரு முறை நேரில் பார்த்துவிட்டால் போதும், தொட்டுவிட்டால் போதும் என்று பெண்கள் உருகுவது எல்லாம் உண்மை.
ஆனால், அப்படிப்பட்ட ஆணழகன் கமல்ஹாசனை வேண்டாம் என்று மூன்று மனைவியர்கள் உதறியிருக்கிறார்கள். வாணி, சரிகா தொடங்கி கவுதமி வரையிலும் அவரைவிட்டு மனக்கசப்புடனே பிரிந்தார்கள். இந்த மூவர் தவிர, கமல்ஹாசனை நம்பி ஏமாந்த நடிகைகள் என்று திரையுலகில் ஏராளமான பட்டியல் இருக்கிறது.
அதேநேரம் சினிமாவுலகில் திருமணத்திற்கு முன்பு வரை அஜித்துக்கும் எந்த ஒரு நடிகைக்கும் காதல் இருந்ததாக வதந்திகள் கிளம்பியதில்லை. முதல் வதந்தியே ஷாலினிதான். அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்யப் போவதாகவும் பேட்டி கொடுத்து அப்படியே திருமணமும் செய்துகொண்டார். இன்று வரை அவர்கள் இணைந்து வாழ்கிறார்கள்.
கமல்ஹாசனை பார்த்தால்கூட போதும் என்று எத்தனையோ பெண்கள் துடித்துக்கொண்டிருந்தாலும், அவர் வேண்டவே வேண்டாம் என்று விட்டுப்போகும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது எத்தகைய முரண்? ஏன் இந்த நிலைமை என்று பார்க்கலாம். இனி சொல்லப்போகும் விஷயங்களுக்கும் கமல், அஜித் சொந்த வாழ்வுக்கும் தொடர்பு கிடையாது என்பதை அழுத்தமாக சொல்லிவிட்டு காதலுக்குப் போகலாம்.
காதலுக்கு முதல் தேவை நம்பிக்கை. இருவருக்கும் பரஸ்பரம் அதீத நம்பிக்கை இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் ஒருவர் உயர்ந்தவர் என்றும் அடுத்தவர் தாழ்ந்தவர் என்ற எண்ணமும் இருக்கவே கூடாது. இந்த இரண்டையும்விட முக்கியம், பரஸ்பரம் உதவி செய்பவராக இருக்கவேண்டுமே தவிர, அடுத்தவர் மட்டுமே உதவி செய்ய கடமைப்பட்டவர் என்ற ஆதிக்க மனப்பான்மை இருக்கக்கூடாது.
காதலிப்பவர்களுக்குத் தேவையான முக்கியமான விஷயம் தைரியம். தான் காதலிக்கிறேன் என்பதையும், காதலிக்கப்படுகிறேன் என்பதையும் வெளியில் சொல்வதற்கு கூச்சப்படவோ, மறைக்கவோ தேவை இல்லை. காலமெல்லாம் சேர்ந்து வாழ்பவருக்குக் கொடுக்கும் தைரியம் அதுதான். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தைரியத்தை இழக்கவே கூடாது. தைரியம் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாது.
இதையடுத்த தேவை பொறுப்பு. தன்னை நம்பி வந்தவருக்கு வாழ்நாள் பாதுகாப்பு தரவேண்டிய பொறுப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு. ஏனென்றால் வாழ்வில் வெற்றி மட்டுமல்ல தோல்வி, நோய் போன்ற பல சோதனைகள் ஏற்படலாம். அப்போதும் காதலுடன் துணை நிற்க வேண்டியது அவசியம்.
இதையெல்லாம் தாண்டித்தான் அன்பு, காமம், அழகு போன்ற விஷயங்கள் வரவேண்டும். அப்படிப்பட்ட காதல்தான் என்றென்றும் நிலைத்து நிற்கும். இதுவரை காதல் செய்யாதவர்கள், இனியாவது காதலைப் புரிந்து ஆனந்தமாக வாழலாம்.