மஞ்சள் முகம், கை, கால் ஏன் உடல் முழுக்க இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டது. மஞ்சள் ஒரு கிருமி நாசினி என் பதால் அவை சருமத்தையும் பாதுகாத்தது. சரும துவாரங்களில் அழுக்குகளையும் கிருமிகளையும் சேர்க்க விடாமல் தடுக்க உதவியது. மஞ்சள் வாசத்தால் பூச்சிகள் அண்டாமல் இருந்தது. அதனால் தான் மஞ்சள் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை விடாமல் வைத்திருந்தார்கள் நம் வீட்டு பெண்கள்.
மஞ்சளில் கர்குமினாய்டு என்ற நிறமி உள்ளது. இது உடலில் ஆன்டிஆக்ஸிடென்ட்டை இணைத்து கொடுக்கிறது. இவை சரும செல்களை தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து பாதுகாத்து, வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளை குறைக்கிறது. மற்றும் கரும் புள்ளிகள், கோடுகள், சுருக்கங்கள் முதலியவற்றை வராமல் செய்கிறது.
தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது மஞ்சள் சேர்த்து, வெடிப்பு ஏற்பட்ட பாதங்களில் தடவவும். 15 நிமிடம் கழித்து கழுவவும். பாதங்கள் மென்மையாகி வெடிப்புகள் மறையும்.
முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை எடுக்கிறது. ½ ஸ்பூன் மஞ்சளுடன், 2 ஸ்பூன் சந்தனத்தை சேர்த்து சிறிது பாலுடன் கலக்கி ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவவும். மஞ்சள் காய்ந்தவுடன், தண்ணீரால் முகத்தை கழுவவும். தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
இன்றைய நாட்களில் கலப்படம் அதிகரித்து இருப்பதால், நல்ல தரமான மஞ்சளை வாங்கி நாமே அரைத்து பயன்படுத்துவது நல்லது. இந்த மஞ்சளை கொண்டு அழகை மேம்படுத்தி மஞ்சள் மேகமாக பவனி வரலாம்.