தேனியை சேர்ந்த ரவிக்குமார் – தாரணி தம்பதியர் தான் ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தம்பதியர். அவர்களின் மகனான ஜஸ்வந்த் படிப்பது என்னவோ 4-ஆம் வகுப்புதான். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல செய்த சாதனை பெரிது.
நீச்சலில் ஆர்வமுள்ள ஜஸ்வந்த தேனியில் விஜயக்குமார் என்ற பயிற்சியாளரிடம் கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார். மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பரிசுகளை வென்ற ஜஸ்வந்தின் அடுத்த இலக்கு கடல் நீச்சலாக இருந்தது. அதற்காகவும் பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில் ஜஸ்வந்த் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையான 30 கிலோமீட்டர் தூரத்தை நீந்திக் கடக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் தலைமன்னார் துறைமுகத்தில் இருந்து நீந்தத் தொடங்கிய ஜஸ்வந்த் பிற்பகல் 2.35 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் கரையேறினார். சுமார் 10 மணி 30 நிமிடங்கள் சாதனைக்கான நேரமாக அமைந்தது.
இதன்மூலம் 25 ஆண்டுகாலமாக முறியடிக்கப்படாத குற்றாலீஸ்வரனின் சாதனையை ஜஸ்வந்த் முறையடித்துள்ளார். குற்றாலீஸ்வரன் தனது 12 -வது வயதில் இந்த தூரத்தை 16 மணி நேரங்களில் கடந்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது
சாதனை படைத்த சிறுவன் ஜஸ்வந்திற்கு ரயில்வே காவல் பிரிவு டி.ஜி.பி சைலேந்திரபாபு, இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள், மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.