காரமடை வனத்துறையினரால் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி வருகிறது .
சனி, ஞாயிறுகளில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். 20 பேருக்கு குறையாமல் முன்பதிவு செய்தால், எல்லா நாளிலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஒரு நாள் முழுவதும் அந்த அழகிய காட்டுக்குள் சுற்றி என்ஜாய் பண்ணுவதற்கு பெரியவர்களுக்கு 300 ரூபாயும் சிறியவர்களுக்கு 200 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கோவையில் இருந்து காரமடை வழியாக இரண்டரை மணி நேர பயணம் செய்தால் பரளிக்காடு பரிசல் துறையை அடையலாம். காலை 10 மணி அளவில் பூச்சிமரத்தூரில் உள்ள பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. பைக், காரில் செல்லலாம்.
அங்கு சென்றதும் வனத்துறையினரும் அப்பகுதி மலைவாழ்மக்களும் வரவேற்பார்கள். சுக்கு காபி கொடுத்து உபசரிப்பார்கள்.
முப்பதுக்கும் மேற்பட்ட பரிசல்கள் உள்ளன. ஒரு பரிசலில் 4 பேர் வீதம் செல்லலாம். 2 மணி நேரம் பரிசலில் இன்பமாகப் பயணிக்கலாம். மலை அடிவாரங்களில் அவ்வப்போது இறங்கி ஓய்வெடுக்கவும் செய்யலாம்.
வனப்பகுதியில் நடந்து சென்று அங்குள்ள பழங்கடியின மக்களையும் அவர்களுடைய வாழ்வையும் பார்வையிட முடியும்.
அந்த பரிசல் பயணம் முடிந்ததும், பழங்குடியின மக்களால் மக்களால் சமைக்கப்பட்ட சுவையான உணவு உங்களுக்காகத் தயாராக இருக்கும்.
களி , நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, கேசரி, சப்பாத்தி, கீரை மசியல், வெங்காய தயிர்பச்சடி, தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய், மினரல் வாட்டர் அத்தனையும் கொடுக்கப்படுகிறது. உணவின் ருசி நம்மை கிறங்கடிக்கும்.
பரிசல் கரையில் உள்ள மரக்கயிறு ஊஞ்சலில் விளையாடி மகிழலாம்.
அங்கிருந்து மாலை 3 மணியளவில் காரமடை செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றின் நீரில் குளிக்கலாம். அங்கு 5 மணி வரை ஆட்டம் போடலாம்.
பின்னர் வனத்துறையினர் வழியனுப்பி வைப்பார்கள். பரிசல் பயணம், ஆற்றுக்குளியல் வனத்துறையினரின் கண்காணிப்பில் நடப்பதால் தைரியமாக செல்லலாம்.
பரளிக்காடு சுற்றுச்சூழல் வனச்சுற்றுலாவை குடும்பத்தோடு என்ஜாய் பண்ண வேண்டும் என்று நினைத்தால் பின்வரும் தொலைபேசி எண்ணின் வழியாக மூன்று நாட்களுக்கு முன்பாக வன அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தொடர்புக்கு
944655663 ,
0422- 2302925
9655815116
0422-2456911