சமையல் பெண்ணின் வேலையே கிடையாது
என்பதுதான் உண்மை. இதை நம்ப மறுத்தால் இன்று புகழ்பெற்ற அத்தனை ஹோட்டல்களிலும் எட்டிப்
பாருங்கள், சமையல் மாஸ்டராக ஆண் மட்டுமே இருப்பான். ஏனென்றால், அது ஒரு கடினமான பணி.
அதனால் அதில் இருந்து பெண்ணை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிப்பதுதான் மகளிர் தின சிந்தனையாக
இருக்க வேண்டும்.
எழுத்தாளர் அம்பையின் பெண் கதாபாத்திரங்கள் மனசுக்கு வலிக்கும் வகையில் உண்மை
பேசுபவை. சமையல் கட்டில் முடங்கிக்கிடக்கும் பெண் கதாபாத்திரம் பேசுவதாக ஒரு காட்சி
வரும்.
‘’பத்து வயசு தொடங்கி
தோசை சுடறேன். நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை… ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள்.
நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள். இது தவிர இட்லிகள்,
வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். இரவில் அவளுடைய கையை எடுத்து முகத்தில்
வைத்துக் கொண்டாள். சோற்றுமணம் அடித்தது. புல யுகங்களின் சோற்று மணம்’’ என்று
எழுதியிருப்பார் அம்பை.
இன்றைய பெண்ணின் வரலாறு மட்டுமல்ல, இது காலகாலமாக பெண்ணுக்குப்
பூட்டப்பட்டிருக்கும் விலங்கு. சமையல்கட்டை கைக்குள் போட்டுக்கொள்வதில்தான் வெற்றி
இருப்பதாக நம்பினாள். ருசி மூலம் ஆணை மயக்கி, குடும்பத்தை ஜெயிக்கலாம் என்று
ஆண்கள் சொன்னதை நம்பியே சமையல் கட்டுக்குள் முடங்கிக்கிடந்தாள். ஆனால் இப்போது
பெண் மாறுகிறாள். ஆணைப் போலவே வேலைக்குப் போகிறாள். ஆணை மட்டுமே நம்பியிருந்த
சூழல் மாறுவதால் சமையல் கட்டில் இருந்தும் வெளியேறுகிறாள்.
இதன் அர்த்தம், இனி வீடுகளில் சமையல் நடக்காது, எல்லோருமே ஹோட்டலில்
சாப்பிடும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்பது அல்ல. ஏனென்றால் உணவின்றி அமையாது
வாழ்வு. ஆரோக்கியமும் சுவையும் கொண்ட உணவுதான் மனித குலத்தை உயிர்ப்புடனும்
உவப்புடனும் வாழவைக்கும். அதனால் வீடுகளில் சமையலறை இருக்கத்தான் செய்யும். ஆனால்
அது இனி பெண்களுக்கான பிரத்யேக இடமாக இருக்காது.
பெண் வேலைக்குச் செல்வது எப்படி அவசியமாகிவிட்டதோ, அப்படியே ஆண் சமைப்பதும்
அவசியமாகிவிடும். அதேநேரம் சமையலறை இன்னமும் மாடர்ன் ஆகிவிடும். அதாவது
சமைப்பதற்கு நிறைய நேரம் மற்றும் உழைப்பு சிந்த அவசியம் இருக்காது. ரெடிமேட்
உணவுகள் பெருகிவிடும். ஒவ்வொரு உணவிலும் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை
அறிந்துகொண்டு, அவற்றை மட்டும் உட்கொண்டால் போதும் என்ற நிலைமை உண்டாகிவிடும்.
இந்த நிலை உடனே நிகழப்போகிறது என்று அர்த்தம் இல்லை. ஆனால் கண்டிப்பாக நடக்கும்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் நைட் ஷிப்ட் வேலைக்குச் செல்வாள் என்பதை யாரும்
கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அப்படித்தான் நிகழ்ந்தது. அதனால் அடுத்த
பத்து ஆண்டுகளுக்குள் ஆண் சமைப்பது கட்டாயம் என்ற நிலைமை நிச்சயம் வரலாம். அதற்கு
பெண்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
அது, பெண் குழந்தைகளுக்குப் போலவே ஆண் குழந்தைக்கும் சமையல் கலையை கற்றுத்தர
வேண்டும். தனியே வாழும் சூழல் ஏற்படும்போது யாரையும் நம்பாமல் தானே சமைத்து
சாப்பிடும் நம்பிக்கையும் துணிச்சலும் ஆணுக்கும் ஏற்படவேண்டும். இந்த நம்பிக்கையை
வளர்ப்பதில்தான் பெண்ணின் வெற்றி இருக்கிறது. குழந்தையில் இருந்தே சமையலைக்
கற்றுக்கொண்டால் நிச்சயம் அது சுமையாகத் தெரியாது.
அடுத்ததாக ஆணுக்கு சொல்லித்தரவேண்டிய ஒரு கலையும் பெண்ணிடம் இருக்கிறது.
அது, குழந்தை வளர்ப்பு. குழந்தை வளர்ப்பில் ஆணுக்கும் பங்கு இருக்கவேண்டும்
என்பதற்காகத்தான் இப்போது மேலை நாடுகளில் ஆணுக்கும் பிரசவகால விடுப்பு
கொடுக்கிறார்கள்.
கருவை வயிற்றில் சுமப்பதை ஆண் செய்யமுடியாது என்றாலும் அடுத்தடுத்த
காலங்களில் பெண்ணிடம் இருந்து சுமையை ஆண் ஏற்றுக்கொள்ள முடியும். குழந்தை பிறந்த முதல் இரண்டு ஆண்டுகள் பெண்
சரியாக சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல், தன்னை பராமரித்துக்கொள்ள முடியாமல்
அவதிப்படுகிறாள். இந்த நேரங்களில் அவளுக்கு நிச்சயம் ஆணின் தோள்கள் ஆதரவாகத் தேவை.
இதனால் தாயிடம் குழந்தைகளுக்கு இருக்கும் பாசம் போய்விடும் என்று அஞ்சத் தேவை
இல்லை. ஏனென்றால் தாயின் மனப்பூர்வமான அன்புக்கு ஈடாக இந்த உலகில் எதுவும்
கிடையாது.
இதுதவிர, இன்றும் நிறைய துறைகள் ஆண்கள் வசமே இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக
பெண்கள் அனைத்துத்துறைகளிலும் இருக்கிறார்கள் என்றாலும், அனைத்துத் துறையிலும்
அறிவு பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தனக்குத் தேவையில்லாத எதையும்
தெரிந்துகொள்வதில் பெண் ஆர்வம் காட்டுவதே இல்லை. இந்த நிலையும் நிச்சயம்
மாறவேண்டும்.
அதனால் அடுத்து பெண்கள் கைப்பற்றவேண்டிய முக்கியமான துறை குடும்ப பட்ஜெட்.
இரண்டு பேர் சம்பாதித்தாலும் குடும்ப பட்ஜெட் போடுவதும், வரவு செலவு குறித்த
முக்கிய முடிவுகளை எடுப்பதும் கணவனாகத்தான் இருக்கிறான். இதற்கு முக்கியமான
காரணம், பட்ஜெட் பற்றியும் பண மேலாண்மை பற்றியும் பெண்ணுக்கு எதுவும் தெரியாது
என்ற அலட்சியம்தான். இது ஒரு வகையில் உண்மையும்கூட.
சமையல் புத்தகங்கள் வாங்குவதற்குக் காட்டும் ஆர்வத்தில் சிறுபங்குகூட, நிதி
மேலாண்மை குறித்து தெரிந்துகொள்ள பெண்கள் விரும்புவது இல்லை. ஆனால் நடைமுறை
வாழ்க்கையில் சிக்கனமாக நடந்துகொள்பவர்களும், ஆடம்பர செலவுகளைக் குறைப்பதும்
பெண்கள்தான். இத்தனை திறமை படைத்த பெண் இன்னும் கொஞ்சம் முயற்சியெடுத்து நிதி
மேலாண்மை குறித்தும், வங்கிக் கணக்கு, தபால்துறை கணக்குகள், இன்வெஸ்ட்மெண்ட்,
வருமானவரி பிடித்தம் போன்ற தகவல்களை அறிந்துகொள்ளத் தொடங்கினால் வீட்டு பட்ஜெட்டை
கணவனைவிட மனைவியால் மிகச்சிறப்பாக போடமுடியும். அவள் பட்ஜெட் போடும்போது முதல்
விஷயமே சேமிப்பாகத்தான் இருக்கும். அந்த சேமிப்பு என்பது ஆரோக்கியத்துக்காகவும்
ஆனந்தம் தரும் சுற்றுலா போன்ற விஷயங்களுக்காகவும்தான் இருக்கும். ஆனால் ஆண்
பட்ஜெட் போடும்போது, அவனது முதல் செலவு ஆடம்பரப் பொருளை வாங்குவதாகத்தான்
இருக்கும். அதனால்தான் ஆண் போடும் பட்ஜெட் துண்டுவிழுகிறது. வீட்டில் மட்டுமின்றி
நாட்டிலும் நிதி அமைச்சராக ஆண் இருப்பதுதான் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது.
எதிர்காலத் தேவைகளை திட்டமிடுவதிலும் பெண்ணே சிறப்பாக செயல்படுவதாக ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. மகன் படிப்புக்கு எவ்வளவு தேவைப்படும், மகளுக்கு படிப்பு மற்றும்
திருமணச் செலவு, எதிர்காலத்தில் ஓய்வுகாலத் தொகை, வயதானபிறகு மருத்துவச்செலவு
என்று ஆணின் கண்களுக்குத் தட்டுப்படாத விஷயங்கள் எல்லாமே பெண்களுக்குத் தெரிகிறது.
அதனால்தான் இப்போது உலகெங்கும் நிதிநிர்வாக மேலாண்மையில் பெண் தலைமை அதிகாரிகள்
எண்ணிக்கை பெருகிவருகிறது.
தனக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ ஆண் அன்றாட அரசியல் நிலவரங்கள் குறித்து
தெரிந்துகொள்கிறான். எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்றாலும் எந்தக் கட்சி
சிறந்த கட்சி, எந்தத் தலைவன் உயர்ந்தவன் என்று வாக்குவாதம் செய்வதற்குத் தயாராக
இருக்கிறான். உள்ளூர் முதல் உலக அரசியல் வரையிலும் தெரிந்தவர்களுடன் பேசி,
தன்னுடைய மேதமையைக் காட்டிக்கொள்கிறான். ஆனால் இந்த விஷயங்களிலும்
பூஜ்ஜியமாகத்தான் பெண்கள் இருக்கிறார்கள். அரசியல் மட்டுமின்றி தோட்டக்கலை,
சுற்றுலா, செல்போன் ஆராய்ச்சி, கணிணி என்று பெண்கள் அன்றாடம் அறிந்துகொள்ள
வேண்டியவை நிறையவே இருக்கிறது. வரும்காலப் பெண்கள் இவற்றை நிச்சயம் கடந்து
செல்வார்கள், வெல்வார்கள்.