கருவுற்ற 24 வாரத்திலேயே தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பிரசவத்துக்கு, பிறகு தாய்ப்பால் சுரக்கத் தொடங்கும். ஆனால் தாய்ப்பால் ஊட்டுவது, மார்பகம், மார்பகத்தில் பால் கட்டுவது, குழந்தைக்கு போதுமான அளவு பால் என நிறைய விஷயங்களைப் பற்றி இளம் தாய்மார்களுக்கு தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ்தான் இந்தப் பதிவு.
தாய்ப்பால் கொடுக்கும் முறை
- குழந்தையின் முகம் தாயின் மார்ப்பை நோக்கி இருத்தலும் குழந்தையின் வாய் காம்பை பற்றி இருந்தால், குழந்தை தாய்ப்பால் குடிக்க உதவியாக இருக்கும்.
- ஒரு கையால் குழந்தையின் கழுத்தை பிடித்திருக்கவும் இன்னொரு கையால் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியைப் பிடித்து தாய்ப்பால் கொடுக்கலாம்.
- குழந்தையின் மூக்கு மார்பில் பட்டு அழுத்திவிடாமல், குழந்தையின் தலையை லேசாகத் தூக்கி பால் கொடுத்தல் வேண்டும்.
- குழந்தைக்கும் மார்புக்குமான உயரத்தை மெல்லிய தலையணை வைத்து சரி செய்யலாம்.
- குழந்தையின் கீழ் உதடு, நாக்கு, முகவாய் அனைத்தும் தாயின் மார்பகத்தில் இருந்தால் குழந்தை மிக எளிதாகப் பால் கொடுக்க முடியும்.
தாய்ப்பாலும் கூடுதல் உணவும்
- குழந்தையின் 6 மாதத்துக்குப் பிறகு ஒரு வேளை அரிசி உணவும் இன்னொரு வேளை தாய்ப்பாலும் தருவது நல்லது.
மார்பில் புண் வருவதைத் தடுக்க
- குழந்தை பால் குடிக்கும்போது, தாயின் மார்புக் காம்பு வலித்தால் தாயின் சுண்டு விரலால் குழந்தை மற்றும் மார்பக காம்பையும் சற்று பிரித்து விடுங்கள். இல்லையெனில் காம்பு வியர்த்து, ஒட்டி புண் உண்டாகலாம்.
- காம்பு வலிக்கும் போது கவனமாகப் பிரித்து விட்டால் மார்பின் புண் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
இதையும் படிக்க: குழந்தையின் முதல் 1000 நாட்கள் … 21 கட்டளைகள்..!
தாய்ப்பால் குடிக்காமல் தூங்கும் குழந்தைகள்…
- முதலில் குழந்தை வேக வேகமாகப் பால் குடிக்கும். பின்னர் அப்படியே தூங்கிவிடும். பிறகு பசி என அழும்.
- இவற்றைத் தடுக்க, குழந்தை தூங்கிவிட்டால் தாய் தன் மார்புக் காம்பை லேசாக இழுத்து விட குழந்தை மீண்டும் தாய்ப்பால் குடிக்க ஆரம்பிக்கும்.
மார்பைக் கடிக்கும் குழந்தைகளை சமாளிக்க..
- மார்பைக் கடிக்க முயற்சித்தால், குழந்தை வாயிலிருந்து நகர்த்திக் கொள்ள வேண்டும்.
- காம்பைக் கடிக்கத் தொடங்கும் போதெல்லாம், குழந்தையுடன் அன்பாக பேசி, சிரித்தபடியே முதுகில் செல்லமாக தட்டிக் கொடுத்து கடிக்க கூடாது எனத் தலையை ஆட்டி சொன்னால் குழந்தைக்கு புரியும்
பசி என எப்படி அறிந்து கொள்வது?
- தாயின் சுண்டு விரலை நன்றாக சுத்தம் செய்த பின், குழந்தையின் வாயில் வைத்தால் குழந்தைக்கு பசி இருந்தால் விரலை நன்றாகப் பிடித்துக் கொள்ளும். பிறகு நீங்கள் பால் கொடுக்கலாம்.
வலுக்கட்டாயமாகப் பால் கொடுக்கலாமா?
- குழந்தை வயிறு நிரம்பி இருந்தால், பசியில்லாமல் இருந்தால் வலுகட்டாயமாகப் பால் கொடுக்க கூடாது.
இதையும் படிக்க: தாய்ப்பால் தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள், அதற்கான பதில்கள்…
குழந்தையின் ஈறு வீக்கத்தைக் குறைக்க…
- குழந்தைக்கு பல் முளைக்கும் போது லேசான வீக்கம் ஏற்படும். இதனால் குழந்தை மார்பைக் கடித்து விடும். இதனால் குழந்தையின் ஈறுகளில் வெள்ளைத் துணி சுற்றிய விரலால் லேசாக அழுத்தி மசாஜ் செய்திட ஈறு வீக்கம் சரியாகிவிடும்.
தாய்ப்பால் எக்களிப்பதைத் தடுக்க…
- குழந்தை பால் குடித்தவுடன், குழந்தையைத் தோளில் லேசாக சாய்த்து, முதுகில் தட்டி விட வேண்டும். குழந்தைக்கு ஏப்பம் வந்தப்பின் படுக்க வைக்கலாம். இல்லையெனில் குழந்தை தாய்ப்பாலை எக்களித்து விடும்.
தாய்மார்களின் உள்ளாடை
- தோள்ப்பட்டை ஸ்ட்ராப் கனமானதாக, அகலமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மார்பின் எடையை பிராவால் தாங்க முடியும்.
- பிராவின் முன் பக்கம் மார்பு பகுதியில் திறப்பு உள்ள பருத்தி ஆடை பிராவை பயன்படுத்தலாம்.
தாயின் மார்பகங்களை எப்படிப் பாதுகாப்பது?
- சுத்தமான வெந்நீரால் ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் சுத்தம் செய்யலாம்.
- குளிக்கும் போது வாசனை இல்லாத, தரமான சோப்பை மென்மையாகத் தேய்த்துக் கழுவலாம்.
மார்பக அழகை ஒப்பிடுதல் சரியா?
- மார்பக அழகு போய்விடும் என தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தவறு. பெண்ணின் கர்ப்பக் காலத்திலே மார்பில் மாற்றங்கள் வந்துவிடும்.
- உங்கள் மார்ப்பை, மற்றவருடன் ஒப்பிட வேண்டாம்.
- கருவுற்ற 16 வாரங்களுக்குப் பிறகு மார்பக காம்பு லேசாக வெளிவந்து, அதனை சுற்றி கறுப்பு நிறம் உண்டாகும்.
- மார்பகத்தில், ரத்த நாளங்களில் பச்சை நிற அடையாளமாகத் தெரியும்.
பிரவச காலத்தில் வரும் சீம்பால்
- பிரசவ காலத்தில் வெளிர் மஞ்சள் நிறம் அல்லது இளமஞ்சள் நிற திரவம் காம்பு வழியாக வரும். அதைப் பலரும் வழித்துத் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்படி செய்ய கூடாது.
- இந்த பாலை ‘கொலஸ்ட்ரம்’ என்பார்கள். இது பிறந்த குழந்தைக்கு மிக மிக நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது.
இதையும் படிக்க: குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தரவேண்டும்… ஏன்?
மார்பகத் தோல் வறண்டு விடாமல் இருக்க…
- விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் மார்பகத் தோல் வறட்சியாவதுத் தடுக்கப்படும்.
மார்பகத்தில் பால் கட்டினால் என்ன செய்வது?
- மார்பகத்தில் பால் கட்டி லேசாக வீங்கினால், விரல்களால் தடவி சரி செய்ய வேண்டும்.
- கனமான மார்பகத்தை மென்மையாக அழுத்தி, கட்டிய பாலை வெளியேற்றி விட வேண்டும்.
- பால் கட்டாமல் இருக்க மல்லாந்து படுக்காமல், ஒரு பக்கமாக படுக்கவும்.
- கிரீம், மருந்துகள் தடவ கூடாது.
- உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு குழந்தைக்கும் ஆகாது
- உங்களுக்கு எந்த உணவு ஒத்துக்கொள்ளவில்லையோ, குமட்டல் வருகிறதோ அந்த உணவுகள் குழந்தைக்கும் தொந்தரவு தரும். எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.
குழந்தையின் வாயில் ரப்பர் வைக்கலாமா?
- குழந்தையின் வாயில் காலியான புட்டி, ரப்பர் வைக்க கூடாது. இதனால் குழந்தைக்கு பசி ஏற்படுவதே தடுக்கப்படும்.
தாய்ப்பாலைக் கொடுப்பதை எப்போது தவிர்க்கலாம்?
- மஞ்சள் காமாலை, சளி, மார்பு புண், காச நோய் இருந்தால் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.
வெந்நீர் ஒத்தடம்
- ரத்த ஓட்டம், தாய்ப்பால் மார்பில் கட்டாமல் இருக்க, மார்பக வலி ஏற்படாமல் இருக்க வெந்நீர் ஒத்தடம் நல்லது.
குழந்தை பால் குடிக்க மறுத்தால்…
- உங்களின் மேல் வியர்வை துர்நாற்றம் வருகிறதா எனப் பாருங்கள்.
- எரிச்சலும் பூக்கள் வாசனை, சோப் வாசனை இருக்கிறதா எனக் கவனியுங்கள்.
தாய்ப்பால் நிறுத்தும் முறைகள்
- 2 வயது வரை தாய்ப்பால் கொடுத்து மீண்டும், மீண்டும் பால் சுரந்து பால் கட்டினால் அல்லது தாய்ப்பாலை கொஞ்சம் நிறுத்தினாலோ குழந்தை அழத் தொடங்கும். அடம் செய்யும். ஏங்கித் தவிக்கும்.
- திட உணவை அதிகப்படுத்தி, குழந்தையின் கவனத்தை விளையாட்டுப் பக்கம் திருப்பி தாய்ப்பாலை மறக்க செய்ய வேண்டும்.
- அடிக்கவோ திட்டவோ கூடாது.
Source : ஆயுஷ் குழந்தைகள்
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.