26 எழுத்துக்கள் மட்டுமே உள்ள ஒரு மொழியைக் கற்பதில் நமக்கு முக்கியமான தேவை ஆர்வம் மற்றும் விடாமுயற்சி மட்டுமே. இந்த அணுகுமுறையை நினைவில் வைத்துக் கொண்டு முதல்படியாக ஆங்கிலப் புத்தகங்களை படிக்கத் தொடங்குங்கள்.புதுப் புது வார்த்தைகளை கற்றுக் கொள்வதற்கும் இந்தப் பழக்கம் உதவும்.
ஆங்கிலம் பேச விரும்புவர்களின் முதல் பிரச்னை தயக்கம். காரணம் தவறாக ஏதும் பேசி மற்றவர்கள் கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்சம். உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் நீங்கள் கூற விரும்பும் விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்குங்கள். தமிழில் தோன்றும் எண்ணவோட்டத்தை அங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பேசும்போது கால அவகாசம் தேவைதான். நீங்கள் நிதானமாகவே பேசலாம்.நீங்கள் சமீபத்தில் தெரிந்து கொண்ட வார்த்தைகளை அதில் சேர்த்து பேசுங்கள். யூ ட்யூபில் ஆங்கில உரைகளைக் கேளுங்கள். ஹாலிவுட் திரைப்படங்களை சப் டைட்டில் இல்லாமல் பார்க்கத் தொடங்கினால் உச்சரிக்கும் முறையை கற்றுக் கொள்ளலாம்.
ஒரு வாக்கியத்தை நீங்களே உருவாக்க பயிற்சி செய்யுங்கள். அதற்கு அடிப்படை நிறைய வார்த்தைகளை தெரிந்து கொள்வதுடன், சரளமாக அதைப் பேச்சிலும் பயன்படுத்துவதுதான்.செய்தி வாசிப்பாளராக உங்களை கற்பனை செய்து கொண்டு, தினமும் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கச் செய்தியை கண்ணாடி முன்னால் நின்று வாசிக்கத் தொடங்குங்கள். முதலில் இது அசெளரியமாகவும் சுய எள்ளலை உங்களுக்கே தோற்றுவிக்கலாம். ஆனால் எந்த ஒரு முயற்சியும் பயிற்சியால் மட்டுமே கைகூடும். கண்ணாடியின் முன் செய்யும் இந்தப் பயிற்சி உங்கள் தவறுகளை உங்களுக்குச் சுட்டிக் காட்டும். நாளாவட்டத்தில் உங்கள் உச்சரிப்பும் சொற்களை தகுந்த இடத்தில் பயன்படுத்தும் உத்தியும் வளரும்.