பப்ஜி என்ற விளையாட்டை தற்போது கேள்விப்படாத ஆட்களே இருக்க முடியாது. செல்போன்களிலும் கணினிகளிலும் இந்த விளையாட்டை விளையாடாத நபர்கள் மிகவும் குறைவு. பள்ளி மாணவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை பப்ஜி விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டானது புகழ்பெற்ற அதேவேளையில், நேரத்தை வீணடித்து மூளையை மழுங்கச் செய்வதாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காதல் ஜோடியின் கனவு பப்ஜி விளையாட்டால் நிறைவேறி உள்ளது. கேரளாவை சேர்ந்த காதல் ஜோடிகளான முகமது ரசின், சல்வா அகமது ஆகியோர் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை அவர்கள் சண்டை போட்டு கொண்டதற்கு காரணம், முகமது ரசின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு சென்றதே ஆகும்.
கேரளாவில் காதலி கல்லூரி சென்றுகொண்டிருந்த வேளையில், முகமது ரசின் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டார். இரு நாடுகளுக்கு இடையிலான காலம் மிகப்பெரிய வித்தியாசத்தை கொண்டிருந்ததால், இதுவே அவர்களுக்கு வில்லனாக மாறியது. இதனால் காதலர்களுக்கு இடையில் இடைவெளி அதிகமானது. இருவருக்கும் இடையே ஒரு கட்டத்தில் தொடர்பு துண்டித்து போனது. காதல் ஜோடியின் திருமணமும் நின்று போகும் சூழல் ஏற்பட்டது.
அந்த வேளையில் காதலை சேர்த்துவைக்க பப்ஜி விளையாட்டு தனது உண்மையான விளையாட்டை காட்டி உள்ளது. இருவர் விளையாட வேண்டிய இந்த விளையாட்டில் காதல் ஜோடி மீண்டும் சந்தித்துக் கொள்ள நேரிட்டது. இதன்மூலம் இருவருக்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தங்கள் உறவை புதுப்பித்துக் கொண்டனர்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய முகமது ரசின், அது காதலி சல்வா அகமதுவை கேரள மாநிலம் திருச்சூரில் திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் ஜோடி ஆனது தங்களை சேர்த்து வைத்த பப்ஜி விளையாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தங்கள் செல்போனில் அந்த விளையாட்டை விளையாடியபடி புகைப்படம் எடுத்து கொண்டுள்ளது.
இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வட்டமிட்டு வருகிறது.