பொடுகு ஷாம்புவைத் தொடர்ந்துப் பயன்படுத்தினால், தலைமுடி வறண்டு உதிர ஆரம்பித்துவிடும். அதனால், வழக்கமான ஷாம்புவுடன் பொடுகைத் தடுக்கும் ஷாம்புவை சிறிதளவு கலந்து, தலையில் தேய்த்துக் குளிக்கலாம். அல்லது, வழக்கமான ஷாம்புவுடன் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றைக் கலந்து, தலையில் தேய்த்துக் குளித்தாலும், பொடுகு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
தலைக்குக் குளிக்க சீயக்காய் மட்டும் பயன்படுத்துபவர்கள், அதனுடன் செம்பருத்திப் பொடியையும் கலந்து குளித்தால், கூந்தல் வறண்டுபோவதை தடுக்க முடியும். இந்தப் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
மற்ற சீசன்களில் பொடுகு வராதவர்களுக்கும் பனிக்கால சீசனில் வரும். எப்போதும் பொடுகுத் தொல்லை இருப்பவர்களுக்கு, இன்னும் அதிகமாகும். இவர்கள், நல்லெண்ணெயுடன் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றைக் கலந்து, தலையில் தடவி 15 நிமிடம் கழித்து, கூந்தலை அலசிவிடலாம். தலையில் தயிர் தடவி, ஊறவைத்துக் குளித்தாலும் பொடுகு படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்