உங்கள் குழந்தை ஒவ்வொரு மாதமும் வளரும் போதும் உங்களது கடமைகளும் அதிகரிக்கிறது. சரியான வயதில் குழந்தைக்கான பயிற்சி தருவதால் அவன் நல்ல பழக்கங்களோடு வளருகிறான்.
ஒவ்வொரு தாய்மார்களுக்கும் குழந்தை பிறந்தவுடன் அதீத மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு மாதமும் அவன் வளர்வதைக் கண்டு ரசிப்பீர்கள். எனினும், அதே நேரத்தில் உங்களுக்கான பொறுப்புகளும் அதிகரிக்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. உங்கள் குழந்தை உட்கார, தவழ மற்றும் எதையாவது ஒன்றைப் பிடித்து எழுந்து நிற்க, பின் நடக்கத் தொடங்கும் போது என்று ஒவ்வொரு பருவத்திலும் நீங்கள் ஒவ்வொன்றாக அவனுக்கு நடைமுறை பழக்கங்களை கற்றுக் கொடுக்கத் தொடங்க வேண்டும். இது மிக முக்கியமான ஒன்றாகும். வளரும் குழந்தைக்கு கழிவறைப் பயிற்சி (Potty training tips in Tamil) தருவது ஒரு சவாலான வேலைதான்!
எனினும் பல தாய்மார்கள் தங்களது கடமையை உணர்ந்திருந்தாலும் கழிவறைப் பழக்கத்தைச் சரியான வகையில் கற்பிக்கத் தவறுகிறார்கள். இதனால் உங்கள் குழந்தை சரியான பழக்கங்களை கற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். அதனால் எதிர்காலத்தில் பொது இடங்களிலும் பள்ளியிலும் அவர்களும், நீங்களும் சிரமப்பட நேரலாம். மேலும் சில தாய்மார்கள் சரியான பருவத்தில் அடிப்படை பழக்கங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினாலும், சில தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல், குழந்தையும் சரியான முறையில் கழிவறைப் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.
இதையும் படிங்க: கழிப்பறைப் பயிற்சியை குழந்தைக்கு எப்போது தொடங்கலாம்?
இங்கே உங்கள் குழந்தைக்கு கழிவறைப் பயிற்சி அளிக்கும் போது நீங்கள் செய்யக் கூடாத சில விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். குழந்தை பிறந்து 6வது மாதத்திலிருந்து 9 மாதத்திற்குள் கழிவறைப் பயிற்சியை ஆரம்பிக்கலாம்.
உங்கள் குழந்தைக்கு கழிவறைப் பயிற்சி தரும் போது தவிர்க்க வேண்டிய 8 விஷயங்கள்!
1.பொறுமையாகச் சொல்லுங்கள்! வாதம் புரிய வேண்டாம்!
அதிக தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு கழிவறைப் பயிற்சி தரும் போது தங்கள் பொறுமையை இழந்து விடுகிறார்கள். ஒன்றை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அவசரப்பட்டால் உங்கள் குழந்தையால் சரியாகப் புரிந்து கொண்டு கற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். அவன் அதனைப் புரிந்து பின்பற்றப் போதிய நேரம் கொடுங்கள்.
குழந்தை ஆரம்பத்தில் அடம் பிடிக்கும், அழத் தொடங்கும். எந்த விஷயத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாது. இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நிதானமாக இருக்கின்றீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு குழந்தை விரைந்து கழிவறைப் பழக்கத்தை கற்றுக் கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2.தப்பிக்க விடாதீர்கள்
இது மற்றுமொரு முக்கியமான விஷயம். பல குழந்தைகள் அம்மா பயிற்சி தரும் போது அது பிடிக்காமல் தப்பிக்கப் பல வழிகளைப் பயன் படுத்துவார்கள். அதனால் நீங்கள் கூறுவதை அவன் சரியாகக் கவனித்து அதன்படி செய்கிறானா என்று கவனிக்க வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகள் நம்மை விடப் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். நம்மை ஏமாற்றும் சூட்சமங்களையும் அறிந்து வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் சாக்குப்போக்கு சொல்லி தப்பவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதை அப்படியே விட்டுவிட்டால் குழந்தைக்கு சரியான கழிவறைப் பழக்கம் வராமல் போகலாம்.
3.அவசரப் படுத்தாதீர்கள்
நீங்கள் உங்கள் அவசரத்திற்காகக் குழந்தையை அவசரப் படுத்தாதீர்கள். இதனால் அவனும் அந்த தருணத்தை தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு உங்களை ஏமாற்றக்கூடும். தற்போது மலம் வரவில்லை என்பான். அதனால் போதுமான நேரம் கொடுத்து அவனுக்குக் கொடுக்கப் பட்ட வேலையைக் கட்டாயம் முடித்து விட்டே பின் மற்ற வேலைகளைச் செய்யச் செல்லவேண்டும் என்று கட்டளையிடுங்கள். இந்த அவசரமில்லாத ஒழுங்கு நடவடிக்கை குழந்தையின் கழிவறைப் பயிற்சிக்குப் பெரிதும் உதவும்.
இதையும் படிக்க : குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்களுக்கு எந்த கழிப்பறை சிறந்தது? அறிவியல் என்ன சொல்கிறது?
4.இரவு நேரப் பயிற்சியை விரைவாகத் தொடங்காதீர்கள்
உங்கள் குழந்தைக்குப் படிப்படியாகத்தான் பயிற்சியைத் தர வேண்டும். முதலில் பகல் நேரங்களில் அவனுக்குத் தரக்கூடிய பயிற்சிகளைத் தருவது நல்லது. பின் இரவு நேர பயிற்சிகளைத் தொடங்கலாம். இரண்டையும் ஒரே சமயத்தில் நீங்கள் வலியுறுத்தினால் அவன் சரியாகக் கற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். அவனுக்கு கழிவறைக்குச் செல்வதே பிடிக்காமல் போகலாம். படிப்படியாக அவனைப் பழக்கப்படுத்தங்கள்.
5. அழுத்தம் தர வேண்டாம்
உங்கள் குழந்தை கழிவறைப் பழக்கத்தை விளையாட்டுத்தனம் மற்றும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள உதவுங்கள். அவனுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறாதீர்கள். மெதுவாகவும் ஆர்வத்துடனும் செய்வதே அவனுக்கு மனதில் பதிந்து நாளடைவில் நீங்கள் கற்றுத்தருவதைப் பின்பற்ற வழிவகை செய்யும். இதைப் பற்றி இதமாக சொல்லி அவனைப் பழக்கப்படுத்துங்கள்.
6.காலக்கெடு கொடுக்காதீர்கள்
ஒன்றை தன் வாழ்க்கையில் புதிதாகக் கற்றுக்கொள்ளும் போது அதற்கு அதிக நேரம் பிடிப்பது இயல்பே. இது பெரியவர்களுக்கும் பொருந்தும். அதனால் உங்கள் குழந்தைக்கு ஒன்றை கற்றுக் கொடுக்கும் போது அவன் அதனைப் புரிந்து கொண்டு கற்றுக்கொள்ள போதுமான நேரம் கொடுப்பது முக்கியம்.
7.கோபத்தை காட்டாதீர்கள்
உங்கள் குழந்தைக்கு ஒன்றை கற்றுக் கொடுக்கும் போது அவன் அதைச் சரியாகச் செய்யாமல் அடம் பிடிப்பதும் வேறு விஷயங்களில் கவனத்தைச் செலுத்துவதும் அல்லது உங்களிடமிருந்து தப்பிக்க சில சுட்டித்தனங்கள் செய்வதும் இயல்பே. இருப்பினும் சில தாய்மார்களுக்கு அவ்வாறு செய்தால் கோபம் வரக்கூடும். நீங்கள் கோபத்தைக் காட்டுவதால் உங்கள் குழந்தை பயப்படக் கூடுமே தவிர அவன் மகிழ்ச்சியோடு கழிவறைப் பழக்கத்தைக் கற்றுக்கொள்ள மாட்டான். அதனால் முடிந்த வரை அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் அவனுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
8.அடிக்க வேண்டாம்
உங்கள் குழந்தை பொது இடத்திலோ அல்லது வீட்டிலோ மலம் கழித்து விட்டால் அவனை அடிக்க வேண்டாம். பொறுமையாக எடுத்துக் கூறி திருத்துங்கள். அடிப்பதால் அவனது பழக்கம் இன்னும் சரியாகாமல் போக வாய்ப்புள்ளது. இது மாதிரி செய்வது தவறான பழக்கம் என்று விளக்கி கழிவறைப் பயிற்சியை அளியுங்கள். அவனும் புரிந்துகொண்டு தன் பழக்கத்தை மேம்படுத்த முனைவான்.
இது மட்டுமன்றி நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தொடர்ந்து இடைவெளி இன்றி கழிவறைப் பயிற்சி தர வேண்டும். அவ்வாறு செய்யும் போதே அவன் அதன் முக்கியத்துவத்தையும், தேவையையும் அறிந்து கொண்டு சரியாகக் கற்றுக் கொள்வான். மேலும் நீங்கள் அவனுடன் அதிக நேரம் செலவிட்டு அவனது தேவைகளையும் அவனுக்கு எப்படி பயிற்சி தந்தால் அவன் விரைவாகக் கற்றுக் கொள்வான் என்றும் தெரிந்து கொள்வது முக்கியம்.
சரியான நேரத்தில் பயிற்சியைத் தொடங்கும் போது உங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும்
இருப்பான்.