என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எஃப்.டி. மற்றும் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பி.டெக்., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வு, அதனைத் தொடர்ந்து ஜே.இ.இ. பிரதானத் தேர்வு (Advanced) ஆகியவை நடத்தப்படுகின்றன.
முதல் நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி.. சி.எஃப்.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர முடியும். அதேசமயம், முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்று, பிரதானத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
இதில் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (CBSE) , பிரதானத் தேர்வை ஏதாவது ஒரு ஐஐடி-யும் இதுவரை நடத்தி வந்தன.
இந்த நிலையில், இந்த கல்வியாண்டுக்கான முதல்நிலைத் தேர்வை நடத்தும் பொறுப்பை, தேசிய தேர்வு முகைமையிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.
இதன்படி ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது தொடர்ச்சியாக இரண்டு முறை முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும். முதலில் 2019 ஜனவரியிலும், அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்திலும் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும்.
அதாவது, ஜனவரி மாத முதல்நிலைத் தேர்வில் திருப்திகரமான மதிப்பெண் பெறாத மாணவர்கள், ஏப்ரலில் நடைபெற உள்ள முதல்நிலைத் தேர்வில் பங்கேற்கலாம்.
இந்த இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எதுவோ அதை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த இரண்டு தேர்வுகளுக்குப் பிறகே ஜே.இ.இ. பிரதானத் தேர்வு நடத்தப்படும்.
இதன்படி ஜனவரி மாதம் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவற்றிற்கான தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டன நிலையில் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஒரு முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது அதற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வானது ஏப்ரல் 7 முதல் 20 -ஆம் தேதி வரையிலான ஏதாவது ஒரு தேதியில் நடத்தப்பட உள்ளது. தேர்வு தேதி விரைவில் இறுதி செய்யப்பட்டு NTA இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு www.jeemain.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசித் தேதியாகும்
மேலும் விவரங்களை https://ntanet.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.