கேரளா மாநிலத்தில் கண்ணூர் என்னுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள புத்தியபுரம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர். இவருடைய வயது 30. இவர் கடந்த 6 வருடங்களாக ஓமன் நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதனிடையே இதே பகுதியை சேர்ந்த ஷிபானா என்ற பெண்ணுடன் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஜாகீருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் ஓமன் நாட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். ஷிபானா 3 மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாகீர் தன்னுடைய நண்பர்களுடன் கால்பந்து விளையாட சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராவிதமாக ஏற்பட்ட மாரடைப்பினால் ஜாகிர் இறந்துபோனார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை ஷிபானாவிடம் தெரிவிக்காமல் இருப்பதற்காக நண்பர்கள் திட்டம் தீட்டினர்.
அதன்படி ஜாகீருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் கர்ப்பிணியாக இருப்பதால் அவருடன் இருக்க கூடாது என்று கூறி கேரளாவிற்கு விமானத்தில் அனுப்பி வைத்தனர். ஒருமுறை பார்த்துவிட்டு செல்லலாம் என்று கூறியபோதும், ஜாகீர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவருடைய நண்பர்கள் கூறியுள்ளனர். ஒருவழியாக ஷிபானாவை சமாதானப்படுத்தி விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
அதே விமானத்திலேயே ஜாகீரின் சடலத்தையும் அவருடைய நண்பர்கள் அனுப்பி வைத்தனர். கேரளா வந்து இறங்கி வீடு திரும்பிய போதுதான் ஷிபானாவுக்கு தன்னுடைய கணவர் இறந்த செய்தி தெரிந்துள்ளது.
தன்னுடனே தன் கணவர் சடலமாக வந்ததை அறிந்துகொண்ட ஷிபானா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவமானது கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.