வாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மக்களிடம் தங்கள் கருத்துக்களை எடுத்துச் செல்ல அரசியல் கட்சிகள் வாட்ஸ்அப் போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் விருப்பமில்லாத குழுக்களில் ஒருவர் இணைக்கப்படுவதை தடுக்க வாட்ஸ்அப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி யார் தங்களை குழுக்களில் இணைக்கலாம் என்பதை தேர்வு செய்யும் வசதி வாட்ஸ்அப் செட்டிங்ஸில் கொடுக்கப்படும். அதாவது Account > Privacy > Groups சென்று, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் “Nobody,” “My Contacts,” or “Everyone.” என்ற ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்வதன் மூலம் நாம் அனுமதி வழங்கலாம்.
எனவே ஒருவரை குழுவில் சேர்க்க அவரது அனுமதி அவசியமாகிறது. ஒருவரை குழுவில் இணைக்க அவருக்கு தனிப்பட்ட தகவல் அனுப்பப்படும் என்றும் அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மூன்று நாட்கள் அவகாசம் இருக்கும் என்றும் வாட்ஸ் அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்பட இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.