பொதுவாக மன அழுத்தம் மற்றும் உடல் வலி இருக்கும் பலர் தேடிச்செல்வது மசாஜ் பார்லர்களைதான். அங்கு பலவிதமாக மசாஜ் செய்யப்படுவதுண்டு. மசாஜ் பார்லர்களில் இருப்பது பெண்களோ அல்லது ஆண்களோ, உடலை மசாஜ் செய்யும்போது தசைகள் மென்மையாகி இலகுவாக மாறிவிடும். மீன் மசாஜூம் மிகப் பிரபலம். மீன்களை கால் பாதத்தில் கடிக்க விடுவது ஒருவித மசாஜ் தான்.
ஆனால் தற்போது யானை மசாஜ் மிகவும் பிரபலமாகி வருகிறது. டன் கணக்கில் எடை கொண்ட யானை மசாஜ் செய்வது மிகவும் விசித்திரமானதுதான். இந்த மசாஜ் தற்போது பலரது உடல் வலிகளை குணமாக்குகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் ஒரு பெண் மல்லாந்து படுத்துக்கொள்ள ஒரு யானை மிக அழகாக அந்தப் பெண்ணுக்கு மசாஜ் செய்கிறது. தனது துதிக்கையால் மெதுவாக அந்தப் பெண்ணின் உடலில் யானை மசாஜ் செய்கிறது. பின்னர் முன்னங்காலால் மிதித்து மெதுமெதுவாக உடல் வலியை நீக்கி விடுகிறது. யானை மாறி மாறி மசாஜ் செய்ய அந்தப் பெண்ணோ மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார். ஆனால் ஒன்று மசாஜ் செய்யும் யானைகளுக்கு மதம் பிடிக்காமல் இருந்தால் சரி.