எட்டு வடிவத்தில் பாதை அமைத்து, அதில் கூழாங்கற்களைப் பதித்து, அதில் நடைப்பயிற்சி செய்வதே எட்டு வடிவ நடைபாதை. எட்டு முதல் 10 அடி நீளத்தில் வடக்கு தெற்கு முகமாக எட்டு வடிவத்தில் பாதை அமைத்துக்கொள்ள வேண்டும். அகலம் ஆறு அடியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். அதன்பிறகு, மிதமான வேகத்தில் நடைப்பயிற்சி செய்யலாம்.
வீட்டின் மொட்டைமாடி, தோட்டப் பகுதி, முன்புறம் போன்ற இடங்களில் இந்த எட்டு வடிவ வர்ம நடைபாதையை அமைக்கலாம். இல்லையென்றால், சில குடும்பங்கள் ஒன்றிணைந்து பொது இடத்தில் இந்த நடைபாதையை அமைக்கலாம். இந்த நடைப்பயிற்சி, இயற்கையுடன் நமது உடலை நெருக்கமாக்கும். இந்த எட்டு, உடலை வருத்தும் நோய்களின் தாக்கத்துக்கு வைக்கும் ஒரு குட்டு.
காலணிகள் இல்லாமல், பாதங்களை இயற்கையின் அதிசயமான கூழாங்கற்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும்படி நடக்க வேண்டும். 10 நிமிடம் வலச்சுழி நடை, பத்து நிமிடம் இடச்சுழி நடை, நோய்களுக்கு நிரந்தர விடைதரும். தொடர்ந்து இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும்போது, உடல் எடையைக் குறைத்து ஆரோக்கிய வாழ்வை மீட்டெடுக்க முடியும். செரிமான உறுப்புகளின் திறன் கூடும்; சர்க்கரை நோய்க்கு கசப்பைக் காட்டும். அதிக ரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.
உடலில் ஏற்படும் சோர்வை நீக்குவதுடன், மனத்தில் ஏற்படும் சோர்வையும் நீக்கி உற்சாகமளிக்கும். வாத நோய்களுக்கான முதன்மையான எதிரி, இந்த எட்டு வடிவ வர்ம நடைபாதை. கூழாங்கற்கள் பொருத்திய நடைபாதையில் தினமும் நடக்கும் முதியவர்களின் ரத்தஅழுத்தம் ஓரளவு குறைந்ததாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அதனை முழுமையாகப் பரிசோதித்துப் பார்க்கவேண்டியது அவசியம்.
நடைப்பயிற்சி செய்யும்போது சுவாசிக்கச் சிரமம், தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், நெஞ்சு அடைப்பது, நெஞ்சுவலி, தாடையில் வலி, தோள்பட்டை வலி, இதயப் படபடப்பு, வழக்கத்துக்கு மாறாக அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனே நடப்பதை நிறுத்திவிடுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு மீண்டும் நடைப்பயிற்சி செய்யலாம்”