பிரஷ் கொண்டு தலைமுடியைப் பிரித்து நுனிவரை ‘டை’ பூச வேண்டும். ‘டை’ நன்கு காய்ந்த பின்னரே தலைமுடியை ஷாம்பூ கொண்டு மெதுவாக அலச வேண்டும். டை இட்டபின் தலைக்கு குறைந்தது 15 நாள்கள் கழித்துத்தான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலையில் எண்ணெய் தேய்த்து அலசும்போது ‘டை’ நிறம் சீக்கிரம் மறைந்து நரை தெரிய வாய்ப்பிருக்கிறது. அதனால் இத்தனை தொந்தரவுகள் இல்லாத கெமிக்கல் டை உபயோகிப்பது எளிது. ஆனால், இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் பல்வேறு வகையான கெமிக்கல் டைகளில் எந்த வகையானது அலர்ஜி ஏற்படாமல் இருக்கிறது என்பதை மட்டும் கண்டறிந்து கொண்டால் போதும். தொடர்ந்து ஒரே டையினை பயன்படுத்துவதுதான் தலைமுடி கொட்டாமல் பாதுகாக்கும்.
ஆனால் இன்று சிலர் இயற்கையிலேயே கறுப்பாக இருக்கும் முடியைக்கூட, ஃபேஷனுக்காக கலர் கலராக மாற்றிக் கொள்கிறார்கள். எப்போதாவது ஒரு முறை அவ்வாறு செய்தால் கேடில்லை. அடிக்கடி செய்தால் முடியின் ஆரோக்கியம் அம்போதான்.
இதைப்போலவே அடிக்கடி செயற்கையாகச் செய்யப்படும் ‘பர்மிங்’ முடியைச் சுருளாக்குதல், ‘ஸ்ட்ரெய்ட்னிங்’ முடியை நேராக்குதல் போன்ற காரியங்களாலும் முடி கொட்டும் வாய்ப்புகள் அதிகமாகும்.