நமது உடலில் அறுபது சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. ஒவ்வொரு அணுவும் உயிர் வாழவும், உடலுறுப்புகளின் இயக்கங்கள் சரிவர நடைபெற நீர் அவசியமாகிறது.
உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதிலும், ஆக்ஸிஜன், கார்பன்–டை–ஆக்ஸைடு போன்ற வாயுக்களை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்குக் கொண்டு செல்வதிலும், உடலில் இருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதிலும் நீரின் பங்கு இன்றியமையாதது.
அழகின் ஆதாரமான தசைகளின் அழகு, இளமை அனைத்திற்கும் நீர் அவசியம்.
‘நீரின்றி அமையாது உலகம்’ எனின் நீரின்றி அமையாது ஆரோக்கியமான அழகு. சீரண உறுப்புகள் சரிவர சுத்தி செய்யப்பட நீர் அவசியம். உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படின் தோலில் சுருக்கங்கள், பருக்கள், இளமையில் முதுமை என நாம் விரும்பத்தாக சரும நோய்கள் பலவும் நம்மைத் தொடர்ந்து வருகின்றன.
எனவே, தினமும் குறைந்தது எட்டு முதல் பத்து டம்ளர்கள் நீர் அருந்துவது மிகவும் அவசியமாகிறது. அழகை ஆராதிப்பவர்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய எளிய இனிய வழி. எனவேதான் அழகுக்குறிப்புகளின் தலையாய அருமருந்தாக முதலில் நீரைச் சொல்கிறோம்.
பெரும்பாலும் தண்ணீர் ஏதோ தாகத்தைத் தீர்க்கக்கூடியது என்பது மட்டும் தான் நாம் அறிந்தது. ஆனால் இந்தப் பெரிய பானத்தில் ‘மருத்துவ குணங்கள்’ அதிகம் என்பது நம்மில் பலர் அறியாதது.
உடலிலுள்ள வேண்டாத கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது மட்டுமின்றி, மாரடைப்பு, எலும்புருக்கி நோய் மற்றும் ஜீரண கோளாறுகள் அனைத்தையும் எளிதாக நிவர்த்தி செய்யக் கூடியது நீர். உடலுக்கு சக்தியையும், தசைகளுக்கு வலுவையும், பொலிவையும் தருவது நீர்தான்.
மனச்சோர்வு, உடற்சோர்வு, மயக்கம் எனில் குளிர்ந்த நீரை முகத்திலடித்தல், கழுவுதல் போன்றவற்றால் புத்துணர்ச்சி கிடைக்கப் பெறுகிறோம் அல்லவா?
நாம் அன்றாடம் சுவாசிக்கவும், உடலிலுள்ள கழிவுகள் வியர்வையாகவும் சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு கோப்பை நீர் வெளியேற்றப் படுகிறது.
கடுமையான கோடைக்காலத்தில் நீர் அருந்துவதும், குளிப்பதும் ஆனந்தம். உடலுக்கு நீர்த் தேவை அதிகமாகிறது. அதிகப்படியான நீர் அருந்துபவர்கள் இளமையைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். மேலும் சீதோஷ்ண சமநிலையை சருமம் தக்கவைத்துக் கொள்வது நம் அன்றாடக் குளியலால்தான்.
தினமும் அதிக பழங்கள், பழச்சாறு அருந்துபவர்களுக்கு உபரியாக நீர்ச்சத்து கிடைக்கும். ஆனால் மசாலா வகைகளை உண்பவர்களுக்கு மேலும் அதிக நீர் தேவைப்படுமல்லவா?
காலை எழுந்ததும் ஒன்று முதல் மூன்று டம்ளர்கள் வெதுவெதுப்பான அல்லது குளிர்ச்சியான நீர் அருந்துதல் நலம் பயக்கும். தவிர இரண்டு மணி நேரத்திற்கொரு முறை ஒரு டம்ளர் நீர் அருந்துதல் வேண்டும்.
நீர்ச்ச்த்து குறைவு எனில் சருமத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. நமது உடலைப் போர்த்திருக்கும் தோல் ஈரப்பதத்துடன், வனப்பாகவும், இளமையாகவும் இருப்பதற்கு நீர்ச்சத்து உகந்ததாகிறது.