கொஞ்சம் உளறல்கள் அதிகமாகவே இருக்கும். மழலையின் சத்தம் உங்களுக்கும் பிடிக்கும். சுற்றியிருப்பவர்களுக்கும் பிடிக்கும். குழந்தை தான் போடும் சத்தத்தையும் விரும்பி கேட்கும். 5 மற்றும் 6 மாத குழந்தைகளை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும்? குழந்தைகளின் மொழியை எப்படி அறிந்து கொள்வது… பார்க்கலாம் வாங்க…
5-வது மாதம்
பா, மா, தா, ஆ போன்ற வார்த்தைகளைக் குழந்தைகள் அடிக்கடி சொல்ல ஆரம்பிக்கும்.
குழந்தையின் சத்தத்தையும் உளறல்களையும் அவசியம் கேளுங்கள்.
குழந்தை அப்படி உளறியபடி பேசும்போது நீங்களும் தலையை ஆட்டியபடி வாய் அசைத்துப் பேசுங்கள். இதனால் குழந்தைக்கு ஊக்கமளித்தது போல தோன்றும். இதனால் குழந்தை பேச முயற்சி செய்யும்.
குழந்தை நன்கு பேசுவதற்கு நீங்கள் செய்யும் இந்த வாய் அசைத்தலும் குழந்தையிடம் பேசுவதும் பயன்படும். எளிதில் குழந்தை பேச உதவி புரியும்.
தலையணை அல்லது மடியை அணைத்தவாறு உங்கள் குழந்தையை உட்கார வையுங்கள்.
சில குழந்தைகள் புரண்டபடியே அறையை வட்டமடிக்க தொடங்கும்.
இதையும் படிக்க: 2-வது மாத குழந்தையை எப்படி பாதுகாப்பது? தாய்க்கு வரும் பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி?
கட்டில், வாசல்படி போன்ற உயர்ந்த இடங்களில் குழந்தையை எக்காரணத்துக்கும் தனியே விட வேண்டாம்.
குழந்தைக்கு இப்போது பசி அதிகமாக எடுக்கும்.
தாய்ப்பால் குடிப்பது குழந்தைக்கு போர் அடிக்கும். ஆனால், நீங்கள் விடாமல் தாய்ப்பால் கொடுங்கள். அதுதான் நல்லது.
நீங்கள் சாப்பிடும்போது குழந்தை பார்த்தால், உணவின் மீது ஆர்வத்தைக் காண்பிக்கும்.
வாயிலும் எச்சில் வடியும்.
6 மாதத்தில் திட உணவு குழந்தைக்கு தரலாம். இப்போதே திட உணவைத் தர வேண்டாம்.
மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும், 5-ம் மாத இறுதியில் திட உணவு கொடுங்கள். மற்றபடி நீங்களாக தர வேண்டாம்.
உங்கள் குழந்தையின் தலை நன்றாகவே நிற்கும்.
பாதுகாப்பான நடை வண்டியை வாங்கி கொடுங்கள். அதைப் பிடித்துக் கொண்டு குழந்தை நிற்க முயற்சிக்கும்.
சுவரைப் பிடித்து குழந்தை நிற்க முயற்சிக்கும்.
குழந்தை தவழவும் செய்யும்.
இதையும் படிக்க: 3 மற்றும் 4 மாத குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும்?
6-வது மாதம்
அழகான, ஆரோக்கியமான குழந்தையை பார்க்க உங்களுக்கு ஆசையாகவே இருக்கும்தானே. குழந்தை செய்யும் குறும்புகளையும் ரசித்துக் கொண்டிருப்பீர்கள்.
இந்த 6வது மாதத்தில் லேசாக சாய்ந்தோ குனிந்தோ குழந்தை உட்கார தொடங்கும். சில குழந்தைகள் உட்கார முயற்சிக்கும்.
தன் கண்களுக்கு ஈர்க்கும் பொருட்களைத் தன் கைகளால் அங்கும் இங்கும் எடுத்து வைக்க ஆரம்பிக்கும்.
தன் கால்களுக்கு பலத்தைக் கொடுத்து, எதையாவது பிடித்துக்கொண்டு எழுந்திருக்க முயற்சி செய்யும்.
சில தருணங்களில் குழந்தை லேசாக தடுமாறும். தள்ளாட ஆரம்பிக்கும். கொஞ்சம் அருகிலே இருந்து கவனித்துக்கொள்ளுங்கள்.
இப்போது குழந்தை படுக்கையில் நன்றாகவே உருள ஆரம்பிக்கும். தூங்கும் குழந்தையை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.
6-வது மாத இறுதியில் குழந்தைக்கு திட உணவு கொடுத்துப் பழக்கப்படுத்துங்கள்.
இந்தக் காலத்தில் வெறும் தாய்ப்பால் மட்டும் போதாது. இரும்புச்சத்தும் அவசியம்.
திட உணவை முதலில் ஒரு விரலால் தொட்டு, குழந்தையின் நாக்கில் தடவி விடுங்கள். உணவின் சுவையை குழந்தை உணரத் தொடங்கும்.
குழந்தைகளை திட உணவுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்குங்கள்.
பாதுகாப்பான, குழந்தைக்கு வசதியான கோப்பையில் குழந்தைக்கு தண்ணீர் கொடுங்கள்.
திட உணவுக்கு இடைவேளியில் கொஞ்சமாக தண்ணீர் கொடுங்கள். இதனால் தானாகவே குழந்தை உணவு சாப்பிட தொடங்கும்.
பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை
- உறிஞ்சக்கூடிய ரப்பர் பாட்டில்களில் குழந்தைக்கு தண்ணீர் கொடுத்தாலோ பால் கொடுத்தாலோ பல் வளர்ச்சி, பேச்சு திறன் மற்றும் கேட்கும் திறன் ஆகியவை பாதிக்கலாம்.
- பால் மற்றும் தண்ணீரை மட்டும் கோப்பையில் கொடுக்க வேண்டும்.
- பழக்கூழ், கஞ்சி ஆகியவற்றை ஸ்பூனில் மூலமாகவும் கை விரலால் ஊட்டிவிடுவதும் நல்லது. கோப்பையிலோ பாட்டிலிலோ கொடுத்தால் புரையேறலாம்.
- பழச்சாறை எப்போதும் 10 மடங்கு தண்ணீர் சேர்த்து நீர்த்த தன்மையில் கொடுப்பது நல்லது.
- குழந்தைக்கு மகிழ்ச்சியூட்டும் செயல்களை செய்யுங்கள். கிச்சுகிச்சு மூட்டி குழந்தையுடன் விளையாடலாம்.
- குழந்தையிடம் சிரிக்க சிரிக்க பேசுங்கள்.
- குழந்தையின் கவனத்தை ஈர்க்கும் பாடல்களை பாடுங்கள். அல்லது ஒலிக்க செய்யுங்கள்.
இதையும் படிக்க: 6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை