முன் தூங்கி முன்னெழுவது முக்கியம் பின்னிரவில்தான் பலரும் உறங்கச் செல்கின்றனர். வேலை என காரணம் கூறுவதெல்லாம் உதவாத விவகாரம். ஏன் பின்னிரவில் விழித்துச் செய்யும் வேலையை அதிகாலை 4 மணிக்குச் செய்யக் கூடாதா? வேலைகளை ஒழுங்குப்படுத்தி இரவு 9 மணிக்குள் படுக்கையறைக்குள் நுழைந்து விடுவதே தூக்கம் கெடாமல் ஆரோக்கியத்தைக் காக்கும். அதிகாலையில் எழும் நல்ல பழக்கமும் உருவாகும். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட நேரத்தில் தனது பணியைச் செய்கின்றன. அந்த வகையில் நாள் முழுவதும் உடலில் சேரும் கழிவுகளை நீக்கும் வேலையை, நள்ளிரவில் உடல் குளிர்ந்திருக்கும்போதுதான் கல்லீரல் தீவிரப்படுத்துகிறது. அந்த நேரத்தில் விழித்திருந்தால், கழிவு நீக்கம் தடைபட்டு மறுநாள் சோர்வு ஏற்படுகிறது
இரவு உணவை ஒழுங்கு படுத்துவது அவசியம் காலையில் பேரரசனைப்போலவும், பிற்பகலில் சாமானியரை போலவும், இரவில் துறவியைப்போலவும் உண்ண வேண்டும் எனக் கூறுவது வழக்கு. இரவில் வயிறுமுட்ட உண்பதைத் தவிர்த்தால் தான் உள்ளுறுப்புகள் நிம்மதியாக ஆற்றலுடன் வேலைசெய்யும். இரவு உணவை தாமதமாகச் சாப்பிடுவதும் தவறு. 7 மணிக்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும். செரிக்க ஏதுவாக பழங்களோ, இலகு வகை உணவுகளோ எடுத்துக்கொண்டால் உறக்கமும் இணங்கி வரும் உடலும் ஆரோக்கியமாகும்.
படுக்கையறைக்கு சம்பந்தமற்றவை படுக்கையறை உறங்க மட்டுமே என்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும், படுக்கையறையில் சாப்பிடுவது, லேப்டாப்பில் வேலை செய்வது, போன் பேசுவது போன்றவை தவிர்க்கப்படவேண்டியவை. படுக்கையறையில் இருந்து டிவி, கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட தேவையற்ற பொருள்களை வெளியே எடுத்து விடுவதே நிம்மதியான உறக்கத்துக்கு முதல் பாதை அமைத்து விடும். விருப்பமான புத்தகங்களை வைத்துக்கொள்ளலாம். உறங்க திட்டமிட்டிருப்பது 9 மணிக்கு என்றால் 8 மணிக்கெல்லாம் படுக்கையறைக்குள் சென்று ரிலாக்ஸ் செய்ய ஆரம்பித்து விட்டால் விரைவில் ஆழ்ந்த தூக்கம் வசப்படும்.
மன உளைச்சல்களிலிருந்து விலகியிருங்கள் மன அழுத்தம் சார்ந்த விவகாரங்களை வீட்டுக்குள் இழுத்து வருவதை தவிர்க்க வேண்டும். உறங்கச் செல்லும் முன்னர் விவாத நிகழ்ச்சிகள், டி.வி சீரியல்கள், வன்முறை சார்ந்த படங்களை பார்ப்பது மன அமைதிக்கு கேடு. சமூக வலைதளங்களுக்குள் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு அதில் நிகழும் பரபரப்புகள் தூக்கத்தை மொத்தமாகப் பறித்துவிடும். சாட்டிங், ஸ்டேட்டஸ், கமென்ட், லைக்ஸ் இவற்றுக்கெல்லாம் ஒரு கால வரையறை வைத்துக்கொண்டு உறங்கச் செல்வதற்கு சிறிது நேரம் முன்பே அவற்றில் இருந்து விலகிவிட வேண்டும். நல்ல இசையைக் கேட்கலாம்.. குழந்தைகளுடன், வாழ்க்கைத் துணையுடன், பெற்றோருடன் நல்ல விஷயங்களைப் பேசி மகிழலாம்.
இரவில் உடற்பயிற்சி ஏன்? இரவு உறக்கத்துக்காக உடற்பயிற்சி செய்வது சரியான பழக்கமல்ல. அதனால் உடற்பயிற்சியின் பலனை அனுபவிக்க முடியாது. காலையில் செய்யும் உடற்பயிற்சியே, உற்சாகத்துக்கும் இரவில் நல்ல தூக்கத்துக்கும் துணை நிற்கும். இருள் கவியும் நேரத்தில் உடலைத் தளர்த்தும் வகையிலான செயல்களே உகந்தவை. மாலையில் கடின உடற்பயிற்சிகளும், வேலைகளும் உடலின் இளைப்பாறலைக் கெடுக்கின்றன. உடற்பயிற்சியால் சோர்ந்து உறங்குவதிலும், இளைப்பாறி ஆழ்ந்து உறங்குவதிலும் ஆரோக்கிய வேறுபாடுகள் உள்ளன. விரும்பினால் உறங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் குளியல்போடலாம் படுக்கைக்குச் சென்றதும் காற்றை ஆழ்ந்து சுவாசித்து, கைகால்களை நன்கு தளர்த்திய பிறகு கண்களை மூட வேண்டும்..