சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் இதயத்தசை நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டான். மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த சிறுவனைக் கண்டு பெற்றோர் வேதனை அடைந்து இருந்தனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த அச்சிறுவனுக்கு இதய தசை பாதிப்பு அதிகமாக இருந்ததால் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் உறுப்புதான் அதற்கான இணைய தளத்தில் அச் சிறுவனின் குடும்பத்தார் பதிவு செய்து வைத்திருந்தனர். அதேவேளையில் மும்பையில் 2 வயது சிறுவன் ஒருவன் மூளைச்சாவு அடைந்து இருந்தான். அவனது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி அச்சிறுவனின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. அதில் இதயத்தசை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் முக்கியமானவன்.
மும்பையில் அச் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து இதயம் வெளியில் எடுக்கப்பட்டு விமானத்தின் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அந்த இதயமானது இரண்டு வயது சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. இதன்மூலம் அவனுக்கு மீண்டும் மறுவாழ்வு கிடைத்துள்ளது. அறுவை சிகிச்சையானது மிகவும் சவாலாக இருந்ததாகவும் இது பெருமைக்குரிய தருணம் எனவும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதேவேளையில் மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்புகளை தானம் செய்த பெருமை மும்பையைச் சேர்ந்த அந்த இரண்டு வயது சிறுவனையே சார்ந்துள்ளது.